கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் புத்தளம் - கருவலகஸ்வெவ - நீலபெம்ம பிரதேசத்தில் காணாமல் போன சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தனது மகளை கொலை செய்து கலாஓயவில் வீசியதாக தாய் ஒருவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய இன்று காலை முதல் சிறுமியை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 150 பொலிஸார் சிறுமியின் உடலை தேடி வருகின்றனர்.

செனொரி நிஷாரா என்ற நான்கு வயது சிறுமியே தாயினால் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செனொரி நிஷாரா என்ற சிறுமி கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அதற்கமைய கடந்த 4 நாட்களாக 150 பொலிஸார் சிறுமியை தேடும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

சிறுமி வசிக்கும் பிரதேசத்திலிருந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். எனினும் இந்த சிறுமி காணாமல் போயிருக்க வாய்ப்பு இல்லையென அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரே சிறுமிக்கு ஏதாவது செய்திருக்க கூடும் என தெரிவித்திருந்த நிலையில், பொலிஸாரின் தீவிர விசாரணையில், தனது மகளை கொலை செய்து விட்டதாக தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளமையானது குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.