இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸிற்கு கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டக்கிளை அலுவலகமான அறிவகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறையின் அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்தார்.

இவர் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் இந்நிய பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன், கர்நாடக மாநிலத்தில் மத குருவாகவும் சேவை செய்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இவர், 1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது அதனை எதிர்த்தும் போராடியுள்ளார்.

இதேவேளை ஈழ விடுதலைப்புலிகளுக்கு இவரது வீடு, புகலிடம் கொடுத்ததோடு 1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைகளை புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டார். ஈழ ஆதரவாளரான இவர் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்து வரும் நிலையில், இவரின் இழப்பு தமிழர்களின் மனதை பெருமளவு பாதித்துள்ளது.