புதுடில்லி ( ராய்ட்டர்ஸ்) இந்திய சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வல்லமைமிக்க மூன்று பெண் அரசியல்வாதிகள் எதிர்வரும் மே மாதமளவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் இரண்டாவது பதவிக்காலத்தை வென்றெடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு பெரிய சவாலைத் தோற்றுவிக்கக்கூடும்.

இந்தியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் பெருமளவு காலகட்டத்துக்கு இந்தியாவை ஆட்சிசெய்த நேரு -- காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி வதேரா ஜனவரியல் முற்றுமுழுதாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். அவரை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராக நியமித்து உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கான பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது.

  மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சரான மமதா பானர்ஜியும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலயமச்சரான மாயாவதியுமே அடுத்த இரு பெண் அரசியல்வாதிகள்.அவர்களுக்கிடையே இன்னமும் உறுதியான இணக்கப்பாடு ஏற்படவில்லை என்றபோதிலும் பெரிய எதிர்க்க்கட்சிகள் கூட்டணியொன்றை அமைப்பதன்மூலம் பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மமதாவும் மாயாவதியும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

" தேசிய ஜனநாயக கூட்டணியை விடவும்  வல்லமைகொண்ட கூடுதலான பெண்களை எதிரணி கொண்டிருக்கிறது.அதனால் அவர்களால் பொதுவில் வாக்காளர்களின் குறிப்பாக பெண்வாக்காளர்களின் நம்பிக்கையை  வென்றெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்து கடந்த வருடம் வெளியேறிய முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா ( வயது 81) கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சின்ஹா, " இந்திமொழி பேசும் மூன்று முக்கிய மாநிலங்களில் அவர்கள் தோல்வி கண்டதால் அவர்கள் கவயைப்படுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டார்.

அரசியல் களத்தில் பிரியங்கா காந்தியின் பிரவேசம் ஊடகங்களிடமிருந்து ஆரவாரமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் ஆதரவாளர்கள் பிரியங்காவின் படங்களைத் தாங்கிய வண்ணம் வீதிகளில் நடனமாடுவதைப் பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.47 வயதான அவர் தனது பாட்டியாரான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உருவச்சாயலை ஒத்திருப்பதாக பேசப்படுகிறது.சிறந்த பேச்சாளரான பிரியங்கா காந்தியினால் வாக்காளர்களை எளிதில் கவரக்கூடியதாக இருக்கும் என்றும் கருத்தப்படுகிறது. தனது சகோதரரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விடவும் வேறுபட்டவராக பிரியங்காவை ஆதரவாளர்கள் நோக்குகிறார்கள். பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொள்வதில் ராகுல் காந்திக்கு இருந்த இயலாமைக்காக அவர் கடந்த காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரத்தின் மீதான மோடியின் பிடியை அச்சுறுத்திக்கொண்டிருப்பவர்களாக காணப்படுகின்ற மற்றைய இரு பெண்களும் பிரியங்கா காந்தியை விடவும் கூடுதலான அனுபவத்தைக்கொண்டவர்கள். கூட்டரசாங்கம் ஒன்றில் பிரதமர் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்களாகவும் அவர்கள் நோக்கப்படக்கூடியவர்கள்.

கடந்த மாதம் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியொன்றை அமைத்த 63 வயதான முன்னாள் ஆசிரியையான மாயாவதி பிரதானமாக தலித்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சமாஜ்வாதி கட்சிக்கு ஏனைய தாழ்த்தப்பட்ட சாதிகளினதும் முஸ்லிம்களினதும் ஆதரவே பெருமளவுக்கு இருக்கிறது.

அடுத்ததாக மமதா பானர்ஜி.அவருக்கு வயது 64.இரு தடவைகள் மத்திய ரயில்வே அமைச்சராகப் பதவிவகித்தவர். 1997 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிநாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய அவர் கடந்த மாதம் மேற்கு வங்கத்தின் தலைநகர்  கல்கத்தாவில் ஒழுங்குசெய்த பாரதிய ஜனதாவுக்கு எதிரான பேரணியில் ஐந்து இலட்சத்துக்கும் அதிிகமான மக்கள் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டது. 

பிரதமர் மோடியைப் பொறுத்தவரையிலும் கூட தனது முதலாவது பதவிக்காலத்தில் பெண்களின் பிரச்சினைகளை அலட்சியம்செய்தார் என்று குற்றஞ்சாட்டமுடியாது." மகளைக் காப்பாற்றுங்கள் ; மகளைப் படிப்பியுங்கள்" என்ற பெயரில் அரசாங்க இயக்கம் ஒன்றை அவர் முன்னெடுத்திருந்தார். இது அடிப்படையில் பெண் சிசுக்கள்  கொலைசெய்யப்படுவதை ஒழிப்பதற்கான இயக்கமாகும். மலசல கூடங்களைக் கட்டிக்கொடுப்பதற்கும் மானிய அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கும் பிரதமர் முன்னெடுத்த திட்டம் பெண்களுக்கு உரிமையும் அதிகாரமும் அளிக்கும் நோக்கிலானதாகும்.

மோடியின் 26 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் 6 பேர் பெண்கள்.என்றாலும் பெருமளவு அதிகாரம் மோடியின் கீழும் அவரது நம்பிக்கைக்குரிய நெருங்கிய சகாக்களின் கீழுமே குவிக்கப்பட்டிருப்பதாக குற்ஞ்சாட்டப்படுவதுண்டு. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை அடிப்படையாகக்கொண்டே மக்களிடம் வாக்கு கேட்கப்போவதாகக் கூறியிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, அதன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மாற்றான உருப்படியான செயற்திட்டம் எதுவும் எதிரணியிடம் இல்லை எனறு கூறுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் 78 லோக்சபா தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி -- அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடப்போகின்ற போதிலும் தேர்தலுக்கு பிறகு அவர்களுடன் கூட்டு ஒன்றை அமைப்பதற்கு காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது. ராகுல் காந்தியும் அவரது தாயார் சோனியா காந்தியும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரு தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று மாயாவதியின் கூட்டணி அறிவித்திருக்கிறது.

  சமாஜ்வாதி கட்சியுடனான தனது கூட்டணியில் காங்கிரஸ் ஒரு அங்கமாக இல்லை.ஏனைன்றால் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணியொன்றை ஏற்படுத்துவதால் தங்களுக்கு பெரும் பயன் கிட்டும் என்று நினைக்கவில்லை  என்று மாயாவதி செய்தியாளர் மகாநாடு ஒன்றில் கூறியிருந்தார்.

ஆனால் மத்தியப்பிரதேசத்திலும் இராஜஸ்தானிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களை மாயாவதியின் கட்சி ஆதரிக்கிறது. ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் நன்கு பழக்கமானவர் என்ற போதிலும் மமதா பானர்ஜிக்கும் காங்கிரஸுக்கும் இடையே முறைப்படியான கூட்டு எதுவும் கிடையாது.

காங்கிரஸின் முன்னாள் தலைவியான சோனியா காந்திக்கும் மமதா பானர்ஜிக்கும் இடையில் நல்ல தனிப்பட்ட உறவு இருக்கின்றதால் அவரது பிள்ளைகளுடன் பணியாற்றுவது ஒன்றும் பிரச்சினையாக இருக்கப்போவதில்லை என்று மமதாவின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தினேஷ் திரிவேதி தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி, மாயாவதி, மமதா பானர்ஜி ஆகியோரின் கூட்டுப் பலம் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இந்திய வாக்காளர்களில் பல்வேறு பிரிவினரைக் கவருவதற்கு பெருமளவுக்கு உதவும் என்று அரசியல் அவதானிகள் நம்புகிறார்கள்.