ஹொரனை வரலாற்று முக்கியத்துவமிக்க ஒலபொடுவ ஸ்ரீ ஜயவர்தனாராம ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

113 வருடங்கள் பழமை வாய்ந்த இவ்விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய உடுவே ஹேமாலோக்க தேரரின் வழிகாட்டலின் பேரில் சங்கைக்குரிய ஒலபொடுவே தம்மிக்க தேரரின் நெறிப்படுத்தலில் இத்தாலியின் மிலானோ நகரில் வசிக்கும் அந்தணி பெரேராவின் நிதி அன்பளிப்பில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதி முதலில் சமய கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை மகா சங்கத்தினரிடம் கையளித்ததுடன், அங்கு புத்தபெருமானின் சிலைக்கு முதலாவது மலர் பூஜையையும் செய்தார்.

சியாமோ பாலி மகா நிக்காயவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரர், மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கலாநிதி நியங்கொட விஜித்த ஸ்ரீ அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர் தயாகமகே, இசுற தேவப்பிரிய, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.