நிதி ஆணைக்குழுவின் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் நிதி ஆணைக்குழு 1987ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

நிதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 30 வருட காலப்பகுதியில் இதன் அலுவலகம் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கும், பணிக்குழாமினருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. 

இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு 2016 ஆம் ஆண்டு நிதி ஆணைக்குழுவிற்கு புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டு வருட குறுகிய காலப்பகுதியில் இராஜகிரிய, சரண மாவத்தை, இல.03 என்ற முகவரியில் இந்த நான்கு மாடி புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாண ஆளுநர்கள், அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதி ஆணைக்குழுவின் தலைவர் யு.எச்.பலிஹகார உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.