(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படுமானால் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியாக அது அமையப் போவதில்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைகளுக்கு ஏற்றவகையிலான தனித்துவமிக்க தேசிய அரசாங்கமொன்றே உருவாக்கப்படுமென்று ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மாகாண சபை தேர்தல் எந்த முறையில் நடத்தப்படுவதாக இருந்தாலும் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே தற்போது முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே இம்முறை எந்த தேர்தல் இடம்பெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கே பெரும் வெற்றிக்கிடைக்கும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.