புலனாய்வு இதழியலை பின்தங்கிய நிலையிலிருந்து மீட்கும் ஒரு முயற்சி - புலனாய்வு இதழியலுக்கான மையம் கொழும்பில் அங்குரார்ப்பணம்

Published By: R. Kalaichelvan

01 Feb, 2019 | 02:27 PM
image

(நா.தனுஜா)

உலகலாவிய ரீதியில் புலனாய்வு இதழியலானது (Investigative Journalism) கணிசமானளவு முன்நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், இலங்கை இன்னமும் ஊடகத்துறையின் தனியொரு பெரும் பிரிவான புலனாய்வு இதழியலில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்ற குறையினை சீர்செய்யும் நோக்கில் புலனாய்வு இதழியலுக்கான மையம் (Center for Investigative Journalism) கடந்த புதன்கிழமை சர்வதேச கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

புலனாய்வு இதழியலில் ஆர்வம் உள்ள ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியமை, புலனாய்வு இதழியலை செயற்றிறன் மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு இன்றியமையாத காலஅவகாசம் மற்றும் நிதி ஆகிய இரு பிரதான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை உள்ளடங்கலாக கடந்த 4 – 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளைத் அடுத்து முதற்தடவையாக இலங்கையில் புலனாய்வு இதழியலுக்கான மையமொன்று  உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டுள்ளமை இலங்கை ஊடகத்துறையின் அடுத்தகட்ட முன்நோக்கிய நகர்விற்கான பயனுறுதியான செயற்பாடாக நோக்கப்படுகின்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் டில்ருக்ஷி ஹந்துனெத்தியை நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், வாசன விக்ரமசேனவை பணிப்பாளராகவும் கொண்டு இயங்கவுள்ள இந்த புலனாய்வு இதழியல் மையத்தின் உருவாக்கம் தொடர்பில் இந்தியாவை தளமாக கொண்டு செயற்படும் ஊடகவியலாளர் செய்யத் நசாகட், ஊடகவியலாளராகவும், ஊடகத்துறை பயிற்சியாளராகவும் பணியாற்றிவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த கமால் சித்தீக் மற்றும் நேபாளத்தை மையமாகக் கொண்ட நேபாளி டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குண்டா தீக்ஸித் உள்ளிட்ட பல பிரபல ஊடக செயற்பாட்டாளர்கள் இச்செயற்பாட்டினை வரவேற்கும் வகையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அத்தோடு புதனன்று நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆலோசக ஆசிரியர் இக்பால் அத்தாஸ் புலனாய்வு இதழியலின் அடிப்படை கூறுகளான முறைப்படியான விசாரணை, குறித்த விடயம் தொடர்பிலான செயற்பாட்டு திட்டத்தினைக் கட்டமைத்தல், அரச மற்றும் பொது ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்தல், சமூகத்துக்கான ஏற்புடைமை மற்றும் நியாயத்துவம் குறித்து கவனம் செலுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தியதுடன், புலனாய்வு இதழியல் தொடர்பில் தனது அனுபவங்களை குறிப்பாக புலனாய்வு இதழியலில் ஈடுபடுவதன் விளைவாக ஏற்படும் ஆபத்துக்கள் என்ற கருத்துக் கோணத்தில் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

புலனாய்வு இதழியலுக்கான தொடக்க நிகழ்வில் மங்கல விளக்ககேற்றல், வரவேற்புரை உள்ளிட்ட ஆரம்ப நிகழ்வுகளை அடுத்து 'இலங்கையில் புலனாய்வு இதழியலின் எதிர்காலம் குறித்த கருத்துருவாக்கம்" என்ற தொனிப்பொருளில் குழுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக புலனாய்வு இதழியலில் ஈடுபடுவதற்கு இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களில் பெரும்பான்மையானோர் முன்வராமைக்கான காரணங்கள் மற்றும் அவற்றை மாற்றியமைக்க கூடிய வழிமுறைகள் என்பன தொடர்பில் விசேட கவனஞ்செலுத்தப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

புலனாய்வு இதழியலில் ஈடுபடுவதற்கு அதிகளவு காலத்தையும், நிதியையும் செலவிட வேண்டியுள்ளமையே இதன் பின்னடைவிற்கும், ஊடகவியலாளர்கள் இதில் அதிக நாட்டம் செலுத்தாமைக்குமான பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஊடகத்துறையிலே காலம் என்பது மிக முக்கியமான அம்சம் என்ற நிலையில் ஒரு புலனாய்வு கட்டுரையை முழுமையாக நிறைவு செய்வதற்கு சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ செலவழிப்பதை இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதுடன், அதற்கான நிதிவசதியை வழங்குவதற்கும் தயக்கம் காட்டப்படுகின்றன.

 

அத்தோடு வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஊடகத்துறையில் நாட்டம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்நிலையில் தமது நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களை புலனாய்வு இதழியலில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கும் செய்தி ஆசிரியர், செய்திப் பிரிவு என்பன இன்னமும் இலங்கையில் மிகப் பின்தங்கிய நிலையில் இருப்பது புலனாய்வு இதழியல் என்ற பரந்த பிரிவை முடக்கியுள்ளது எனவும் கூறப்பட்டது. மேலும் துடிப்பான புலனாய்வு இதழியலில் ஈடுபட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்னர், ஊடகவியலாளர்கள் பலர் அச்சத்தின் காரணமாக புலனாய்வு இதழியலில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுகின்றமையும் பின்னடைவிற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க தலைமையில் இடம்பெற்ற குழுக் கலந்துரையாடலில் கீழ்வரும் பிரதானமான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

அமல் ஜயசிங்க (AFP செய்திச்சேவையின் கொழும்பு பணியக பொறுப்பதிகாரி)

இலங்கையைப் பொறுத்தவரையில் ஊடகத்துறை என்பது ஓர் அங்கீகரிக்கப்படாத தொழிற்துறையாகவே இயங்கி வருவதுடன், காப்புறுதித் திட்டங்களில் தொழிற்காப்புறுதி செய்ய முடியாத துறையாக ஊடகத்துறை காணப்படுகின்றது. இத்தகையதோர் நிலையில் ஊடகத்துறைக்கு பெருமளவானவர்களை கவர்ந்து கொள்வதில் சிக்கல் நிலையொன்று உள்ளதுடன், ஏற்கனவே ஊடகவியலாளர்களாக செயற்பட்டு வருபவர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதிலும் சவால்கள் உள்ளன.

அதுமாத்திரமன்றி உயிரச்சம் அதிகமுள்ள அதேவேளை குறைந்தளவு ஊதியம் வழங்கப்படுகின்ற துறையாகவும் ஊடகத்துறை விளங்குகின்ற காரணத்தினால் இதனைத் தெரிவு செய்பவர்கள் மிகக் குறைவு. இத்தகையதொரு பின்னணியில் அதிகளவு காலமும், நிதித் தேவைப்பாடும் உள்ள புலனாய்வு இதழியலில் ஈடுபடுபவர்கள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மிகக் குறைவு என்பதுடன், அவர்களை ஊக்குவிக்கும் ஊடக நிறுவனங்களும் சொற்பமே.

ஹனா இப்ரஹிம் (Daily Express, Weekend Express  பத்திரிகையின் ஆசிரியர்)

இலங்கையில் புலனாய்வு இதழியல் செயற்பாடுகள் பெருமளவில் இடம்பெறாத நிலையில் பத்திரிகை ஆசிரியர்கள் புலனாய்வு இதழியலின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். அதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில் செயற்பட வேண்டும். காலம் மற்றும் நிதிவசதி என்பன தவிர்க்கப்பட முடியாத தடைகளாக இருக்கின்ற போதிலும் இயலுமாவரையில் புலனாய்வு இதழியலின் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவது அதனை உயிர்ப்புடன் பேணுவதற்கு வழிசெய்யும். சில புலனாய்வு இதழியல் அறிக்கைகளால் விளம்பரதாரர்கள் இல்லாமல் போய்விடுவார்களோ என்ற சந்தேகமும் ஊடக நிறுவனங்களின் தயக்கத்திற்கான பின்னணி காரணமாக உள்ளது.

அமந்த பெரேரா (டார்ட் நிலையத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்)

ஊடகத்துறை குறிப்பாக புலனாய்வு இதழியல் ஊடகவியலாளருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தலையும், ஆபத்தையும் ஏற்படுத்தும் சாத்தியங்கள் உள்ளதொரு துறையாக மாறியிருக்கின்றது. அண்மையில் குருணாகலையில் உள்ள வணக்கஸ்தலமொன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை கண்டறிந்த ஊடகவியலாளர் ஒருவர் அவ்விடயம் குறித்த தகவல்களை சேகரித்தார். எனினும அவர்; அத்தகவல்களை வெளியிடவில்லை. இருந்தபோதிலும்  அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த அச்சுறுத்தல்களை உதாரணமாகக் கூறமுடியும். இத்தகைய சம்பவங்களே புலனாய்வு இதழியலில் ஊடகவியலாளர்கள் ஈடுபடுவதற்கு பின்னிற்பதற்கான காரணங்களாக உள்ளன. இவை தொடர்பில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள புலனாய்வு இதழியலுக்கான மையம் அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.

இலங்கையில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் நாட்டில் புலனாய்வு இதழியலின் பின்னடைவு குறித்து மேற்கண்டவாறு கருத்துக்களையும், தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர். இந்நிலையில் இலங்கையிலுள்ள பிரபல பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள், செய்திச்சேவைகள் மற்றும் அவற்றின் பொறுப்பதிகாரிகள் என்போர் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள புலனாய்வு இதழியலுக்கான மையத்தின் அனுசரணையுடன் தமது நிறுவனங்களிலுள்ள ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு இதழியல் தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு முன்வர வேண்டும். அதனூடாக இலங்கையில் புலனாய்வு இதழியலின் முன்நோக்கிய பயணத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக அமைந்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம்...

2024-10-11 14:49:54
news-image

இலங்கையில் தேர்தல்கள் - முக்கிய அம்சங்கள்

2024-10-09 15:56:40
news-image

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில்...

2024-10-09 15:16:10
news-image

ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 

2024-10-09 15:10:57
news-image

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான...

2024-10-09 12:56:00
news-image

ஷேய்க் ஹசீனாவை நாடுகடத்த முடியுமா?

2024-10-07 13:14:08
news-image

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக்...

2024-10-07 12:57:19
news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06
news-image

புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா வடக்கு...

2024-10-06 15:55:39