இலங்கைக்கு எதிரான இரண்டாவது முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 384 ஓட்டங்களை குவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண தொடரில் விளையாடி வருகிறது,

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ள நிலையில், தொடரின் இறுதியும் இரண்டாவதுமான போட்டி இன்று கேன்பிராவில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

அதன்படி அவுஸ்திரேலிய அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 28 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டாலும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோய் பேர்ன்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தாடி அவுஸ்திரேலிய அணியை ஸ்திரமான நிலைக்கு கொண்டு சேர்த்தனர்.

அதன்படி இவர்கள் இருவருமாக இணைந்து அணிக்காக 308 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த வேளை டிராவிஸ் ஹெட் 161 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 87 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 384 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ஜோய் பேர்ன்ஸ் 172 ஓட்டத்துடனும், மார்னஸ் லேபுஷேன் 6 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக விஷ்வா பெர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும், சமிக கருணாரத்ன ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.