சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 48 படகுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதனடிப்படையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்களின் 165 படகுகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டுமென இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கமைய இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன.

அதற்கமைவாக நல்லிணக்கத்தினடிப்படையில் குறித்த படகுகளை விடுவிப்பதற்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில், இந்திய மீனவர்களின் படகுகளை மீட்பதற்கு இராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் தலைமையில் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில்,குறித்த குழுவினர் யாழ்ப்பாணம்,காங்கேசன்துறை, காரைநகர் மற்றும் கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து குறித்த படகுகளை மீட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.