-முஹம்மத் ஐயூப்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரப்பிரதேசத்துக்கான பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவின் நியமனம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பல காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியைப் பாதிக்கக்கூடிய குறைபாடுடைய ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.

முதலாவதாக,  காங்கிரஸ் என்ற ஒரு " குடுப்பத்துக்குச் சொந்தமான " இயக்கம் மீதான கட்டுப்பாட்டைத் தொடருவதற்கு ஒரு " வம்சம் " ஆர்வம்கொண்டுள்ளது என்ற எண்ணத்தை வாக்காளர்கள் மத்தியில் ஆழமாகப்பதிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கும் ஒரு வலுவான ஆயுதமாக பிரியங்காவின் நியமனம் அமையும்.இதற்கு பிரதான காரணம் தனது சகோதரரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் போன்றே பிரியங்காவும் கட்சிக்கும் மூப்பையும் அனுபவத்தையும் பரந்தளவிலான அரசியல் செயல் ஈடுபாடும் கொண்டவரல்ல.பெருமளவுக்கு அரசியல் உணர்வும் புரிதலும் கொண்ட இந்திய வாக்காளர்கள் காங்கிரஸ மீதான வம்சத்தின் மேலாண்மையை வெறுத்து எதிராக வாக்களிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டாவதாக,  கணவர் றொபேர்ட் வதேரா நில ஊழல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக பிரியங்காவுக்கும் நல்லபெயர் இல்லை.உண்மையோ பொய்யோ, நேரு -- காந்தி வம்த்தின் மருமகன் என்பதால் சட்ட நடவடிக்கைகளுக்கு விதிவிலக்கானவராக தன்னை நினைத்தவராக ஐயத்துக்கு இடமான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குற்றப்பொறுப்புக்கு உரியவர் வதேரா என்றே பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.அவரின் எதிர்மறையான படிமம் பிரியங்காவைப் பாதிக்கிறது.அதனால் தேர்தல் வருடத்தில் கட்சியின் பெயருக்கு பெரும் பங்கம் ஏற்படலாம்.

மூன்றாவதாக,  தேர்தலில் பிரியங்காவின்  செயற்பாட்டுக் களமாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தின் இழக்குப் பகுதி, காங்கிரசைப் பொறுத்தவரை அரசியல் கண்ணிவெடிகள் நிறைந்ததாகும்.தனது தொகுதியான வாரணாசி கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இரப்பதால் பிரதமர் நரேந்திர மோடி அங்கு அதீத கவனம்  செலுத்தியிருக்கிறார்.மாநில முதலமைச்சர் ஜோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோராக்பூரும் கிழக்கு உத்தரப்பிரதேசத்திலேயே அமைந்திருக்கிறது.மேலும், சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அவற்றின் வலுவான ஆதரவுத்தளத்தை அங்கேயே கொண்டிருக்கின்றன.குறிப்பாக, அந்த பகுதியின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் பின்தங்கிய சாதிகளும் தலித்துக்களும் முஸ்லிம்களும் கணிசமான தொகையினராக இருக்கின்றனர்.

கடந்த தேர்தல்களில் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு சொற்ப ஆதரவே கிடைத்தது.பொதுத்தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸுடன் எந்த தொடர்பையும் கொண்டிருப்பதில்லை என்று சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தீர்மானித்துவிட்டது போல் தோன்றுவதால், அவை காங்கிரஸின் முயற்சிகளை தங்களது பிராந்தியத்தில் செய்யப்படுகின்ற அத்துமீறலாகவே பகைமையுடன் நோக்கும்.சமாஜ்வாதி கட்சியுடனும் பகுஜன் சமாஜ் கட்சியுடனும் தொகுதிப்பங்கீடு ஏற்பாடு இல்லாவிட்டால், காங்கிரஸ் 2019 இல் பெரும் பின்னடைவைச் சந்திக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அது ஒரு அரசியல் ஒழுங்கமைப்பாளர் என்ற வகையில் பிரியங்காவின் படிமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி எதிர்காலத் தலைமைத்துவ வாய்ப்புகளைப் பாழாக்கக்கூடும்.

மேலும், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளில் கணிசமான பங்கை பிரியங்காவின் தலைமையின் கீழ் காங்கிரஸினால் பெறமுடியாமல் போகும்பட்சத்தில், பாரதிய ஜனதாவே மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகளை அது அதிகரிக்கும்.ஏனென்றால், பாரதிய ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் ஒரு புறத்தில் சமாஜ்வாதி கட்சி -- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கும் மறுபுறத்தில் காங்கிரஸுக்கும் இடையே சிதறுப்படும். இது மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது என்ற காங்கிரஸின் பிரதான இலக்கை தோற்கடித்துவிடும்.மறுபுறத்தில் பார்த்தால் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கூட்டணியின் தலைமைக்கட்சி என்ற அந்தஸ்துடன் மத்தியில் காங்கிரஸ் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகளும் குலைக்கப்பட்டுவிடும்.

அதனால், காங்கிரஸுக்குள் பிரியங்காவின் உயர்வு காங்கிரஸின் தேர்தல் வாய்ப்புக்களைப் பொறுத்தவரை பாதிப்பையே கொண்டுவரக்கூடியது சாத்தியம்.தாங்கள் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அதன்  பாதகமான பக்கத்தை ராகுல் காந்தியும் அவரது ஆலோசகர்களும் அக உணர்வுகளுக்கு அப்பால் நின்று மதிப்பீடு செய்திருக்கவேண்டும்.

(இந்து)