கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீடுகளில் தங்க ஆபரணங்கள் மற்றும் கணனி உபகரணங்கள் பலவற்றைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் பாவனையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 27 வயதுடைய மேற்படி சந்தேக நபர் நேற்றைய தினம் கட்டுகாஸ்தோட்டைப் பிரதேசத்திலுள்ள சில வீடுகளை உடைத்து அவற்றில் களவாடப்பட்ட பொருட்களை பல்வேறு இடங்களில் விற்பனை செய்த போது   கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். 

இச் சந்தேக நபர் கட்டுகாஸ்தோட்டையில் வசிக்கும் திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் கடந்த காலங்களில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள வீடுகள் பலவற்றை இரவு வேளைகளில் உடைத்து தங்க ஆபரணங்கள், மடிக்கணனிகள் உட்பட பல்வேறு மின்னியக்கப் பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடிய பொருட்களை  நகர பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்திருந்த நிலையில்,  சுமார் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள பொருட்கள் மற்றும் நகைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கண்டி நீதிவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, சந்தேக நபர் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.