நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதத்திற்கோ யுத்தத்திற்கோ இடமில்லை இதனை தமிழ் மக்கள் விரும்பவுமில்லை என தெரிவிக்கும் அரசாங்கம் தமிழக அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணியப் போவதுமில்லை. அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க தயாரும் இல்லையென அரசு அறிவித்தது. கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அரசு சார்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார். 

அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ்பாணத்தில் தற்கொலை அங்கியும் ஆயுதங்களும் மீட்கப்பட்டதை பெரிதுபடுத்தி பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலொன்றும், மீண்டும் புலிப்பயங்கரவாதம் தலை தூக்குவதாகவும் பிரசாரம் செய்கின்றனர். இதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை. 

தினம் தினம் இவ்வாறான ஆயுதங்கள்  கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனால் தேசியப் பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை. மாறாக இவ்வாறான பொய்யான பிரசாரங்களால்  இலங்கைக்கு  விடுமுறையைக் கழிப்பதற்கு வரவுள்ள,  இங்கு ஹோட்டல்களில்  அறைகளை பதிவு செய்த பெரும் தொகையான உல்லாசப் பிரயாணிகள் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி  நாம் இலங்கைக்கு   வரலாமா? மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டதா?  என்றெல்லாம்  வினவுகின்றனர். 

பொய் பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் தமது அரசியல் இருப்பை பாதுகாக்க இதன் மூலம்  முயற்சிக்கின்றனர். ஆனால்,  இவர்களின்  செயற்பாடுகளால் நாட்டுக்கும், பொருளாதாரத்திற்குமே பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் நாட்டுக்கு துரோகம் செய்கின்றனர். அத்தோடு   நாட்டு மக்களும் அச்சமடைந்துள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்கமாட்டார். அத்தோடு மீண்டுமொரு பயங்கரவாதம் தலைத்தூக்குவதற்கு தமிழ் மக்களும் விரும்பவில்லை. அதனை தமிழ்  அச்சமடைந்துள்ளன. அதனை  தமிழ் மக்கள் ஆதரிக்கவும் இல்லை. 

தமிழ் மக்களுக்கு மீண்டுமொரு ஆயுத கலாசாரம் அவசியமில்லை. நான்  அடிக்கடி  யாழ்ப்பாணம் செல்கிறேன். இதனால் அங்குள்ள மக்களின் நிலைமைகளை  நானறிவேன். அதேவேளை  தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு நாம்  ஒரு போதும் அடிமைப்படமாட்டோம். மீனவர்களை விடுதலை செய்வோம். இந்திய மத்திய அரசுடனேயே எமது தொடர்புகள் பேணப்படுகின்றன. 

இதற்கமைய  பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 99 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். அதேபோன்று இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர். 

ஆனால் ஒரு  போதும் இந்திய மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள்  உபகரணங்கள்  வலைகள் ஒரு போதும் மீளக்  கையளிக்கப்படமாட்டாது. அதேவேளை  பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித்துறைமுகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காரைநகர் குறுநகரிலும் மீன்பிடி துறைமுகங்கள்  அமைக்கப்படவுள்ளன. 

அது மட்டுமல்லாது  முல்லைத்தீவிலுள்ள மீனவர்களுக்கு இந்திய உதவியுடன் 150 படகுகள் வழங்கப்பட்டன. இன்னும் இரண்டொரு மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான மீன்  ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படவுள்ளது.ஜீ.எஸ்.பி.வரிச் சலுகையும் கிடைக்கவுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.