சீனாவின் இராணுவம் முக்கியமான மாற்றங்களுக்கு உ ள்ளாகிவருகிறது. உலகம் அதை அவதானித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லை. அண்மைய வருடங்களில், மக்கள் விடுதலை இராணுவம் அதன் தரைப்படைகளைக் குறைத்துக்கொண்டுவந்திருக்கிறது. இப்போது  அந்த இராணுவத்தின்  வரலாற்றில் முதற்தடவையாக தரைப்படைகள் அவற்றின் மொத்த பலத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன. இராணுவத்தின் அளவை அரைவாசியாகக் குறைத்தாலும் கூட சீனா ஏககாலத்தில் அதன் விமானப்படை, கடற்படை கேந்திர தந்திரோபாய ஆதரவுப்படை ஆகியவற்றின் பலத்தை மேம்படுத்தியிருக்கிறது.

         

2015 ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி சி.ஜின்பிங் இராணுவ சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஆரம்பித்த பிறகு இராணுவத்தில் உள்ள சண்டைகளுக்கு பயன்படுத்தப்படாத பிரிவுகளில் பெரும்பாலும் அரைவாசி பணிநிறுத்தம் செய்யப்பட்டுவிட்டன. அதிகாரிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுவிட்டது. உலகின் மிகப்பெரிய தரைப்படையாக விளங்கிய சீன இராணுவத்தின் அளவைக் குறைத்ததன் விளைவாக  நவீனரக ஆயுதங்கள் மற்றும் மிகப்பிந்திய தொழில்நுட்பம் சகிதம் துருப்புக்களை நவீனமயப்படுத்த சீனாவினால் பெருமளவு பணத்தைச் செலவுசெய்யக்கூடியதாக இருக்கிறது.

சீனாவின் உலகளாவிய பேரார்வம் அதிகரித்துவருவதும் எதிர்காலப் போர்களின் தன்மை பற்றிய சீனாவின் புரிதலுமே இத்தகைய செயற்பாடுகளில் அதன் கவனத்தைத் திருப்ப அதை தூண்டிய காரணிகளாகும்.இது காலவரை மக்கள் விடுதலை இராணுவம் சீனப்பிராந்தியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்ட தாயகத்தை தளமாகக்கொண்ட ஒரு தற்காப்புப் படையாகவே விளங்கியது. இந்தியாவுடனும் பூட்டானுடனும் இருக்கக்கூடிய எல்லைத் தகராறு உட்பட அயல்நாடுகளுடனான எல்லைத் தகராறுகளை தீர்த்துவைக்க சீனாவினால் இயலுமாக இருந்தது. அயல்நாடுகளின் படையெடுப்பு என்ற மிகப் பழமைவாய்ந்த  அச்சுறுத்தலை இப்போது சீனா எதிர்கொள்ளவில்லை. 

             

அதனால், கடல்சார் பரிமாணம் மற்றும் தொலைவில் உள்ள வல்லாதிக்க நாடுகள் மீது அது கவனத்தைச் செலுத்துகின்றது. சீனா அதன் இராணுவத்தை பெருமளவில் ஒரு தற்காப்புப் படை என்ற நிலையில் இருந்து தென்சீனக் கடல் மீதும் தொலைவில் உள்ள நிலங்கள் மற்றும் மேற்கு பசுபிக்கில் கடல்பரப்புகள் மீதும் மேலாண்மையை தன்முனைப்புடன் செலுத்தக்கூடிய இராணுவமாக மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக, அமெரிக்காவுடன் குறிப்பாக தாய்வான் விவகாரம் தொடர்பாக மூளக்கூடிய மோதல் ஒன்றுக்காக சீனா தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறது.இந்த பின்புலத்திலேயே சீனா அதன் கடற்படையையும் விமானப்படையையும் பாரிய அளவில் விரிவாக்கம் செய்வதையும் இணையவெளிப் போர்முறைக்கு அது கொடுக்கின்ற உயர்ந்த முன்னுரிமையையும் நோக்கவேண்டும்.

சீனாவின் உலகளாவிய  பேரார்வம் கடந்த தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்திருக்கிறது. வெளிநாடுகளில் குறிப்பாக நவீன பட்டுப்பாதைத் திட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் பின்புலத்தில் சீனாவுக்கு பாரிய பொருளாதார நலன்கள் இருக்கின்றன.இந்து சமுத்திரத்தில் முக்கியமான ஒரு வல்லரசாக வருவதில் அது அக்கறை காட்டுகிறது. அதன் வாணிபம் குறிப்பாக எண்ணெய் கடல் வழியூடானதாகவே இருப்பதால் பெய்ஜிங் அதன் கடல்வழித் தொடர்புகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறது.              

      

இதைச் சாதிப்பதற்கு சீனா அதன் சொந்த கரையோரங்களில் இருந்தும் எல்லைகளில் இருந்தும் வெகு தொலைவில் உள்ள நிலப்பிராந்தியங்களுக்கும் கடற்பரப்புகளுக்கும் விரைவாக படைகளை அனுப்பக்கூடியதாக இருக்கவேண்டும். இதனாலேயே கடற்படைக்கு கூடுதல் முன்னுரிமையை அது கொடுக்கிறது. ஏற்கெனவே ஒரு விமானந்தாங்கிக் கப்பலைக் கொண்டருக்கும் சீனக்கடற்படை மேலும் 5 -6  அத்தகைய கப்பல்களைக் கொண்டிருக்கத் திட்டமிடுகிறது.

சீனாவின் கடற்படையும் விமானப்படையும் ரொக்கெட் படையும்  கேந்திர தந்திரோபாய ஆதரவுப்படையும் சேர்ந்து மக்கள் விடுதலை இராணுவத்தின் பலத்தில் அரைவாசிக்கும் கூடுதலானவையாக அமைந்திருக்கின்றன. இது சீனாவின் பேரார்வத்தின் பருமனை மாத்திரமல்ல, இராணுவத்தில் செய்யப்படுகின்ற மாற்றத்தின் பருமனையும்  வெளிக்காட்டுகிறது. இவையெல்லாம் இந்தியா அதன் இராணுவத்தில்  அவசரமாகச் செய்யவேண்டியிருக்கின்ற மாற்றங்களுக்கான பாடங்கள்.

( டெக்கான் ஹெரால்ட் நியூஸ் சேர்விஸ் )