இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் தனது 88 வயதில் காலமானர்.

கடந்த 1998 முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தவர்.

இது தவிற தொழில் துறை, ரயில்வே போன்ற துறைகளிலும் அமைச்சராக பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்ட இவர் பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  சமதா கட்சியை தோற்றுவித்த இவர் ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர்.  அதன்பின் நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பின்னர் தொழிற்துறை அமைச்சரானர்.

மேலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழகத்தை தளமாகக் கொண்டு ஆரம்பித்த நாளிலிருந்து ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தன்னைப் போராட்டத்துடன் நெருக்கப்படுத்திக் கொண்டவர்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் நாடத்திய படுகொலைகளை முதன் முதலில் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்ததுடன், பின்னாளில் புலிகளுக்கு இந்திய அளவில் தடை இருந்த போதும் உலகளவில் ஈழ ஆதரவு சக்திகளை ஒன்றிணைத்து டெல்லியில் மாநாடு நடத்தி ஆதரவு கோரியவர்.

இந்த நிலையில், வயது முதிர்வை அடுத்து நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.