ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர், நேற்றைய தினம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை உத்தியோகபூர்வமாக இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இச் சந்திப்பின் போது மாலியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் போது பலியாகிய இலங்கை அமைதி காக்கும் படையணியினரை நினைவு படுத்தி தனது ஆழ்ந்த அனுதாபங்களை இராணுவ தளபதிக்கு தெரிவித்தார்.

அத்துடன் இந்த தாக்குதலின் போது பலியான இராணுவத்தினரது குடும்பங்களுக்கு இழப்பீடு திட்டத்தின் கீழ் உதவிகள் செய்வதாகவும் தெரிவித்தார்.

ஐ.நா.வின் வதிவிட பிரதிநிதி மாலியில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அத்துடன் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை அமைதிப்படை இராணுவத்தினர் பலியானதையிட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களை இராணுவ தளபதிக்கு தெரிவிக்குமாறு எனக்கு செய்தி விடுத்தார்.

அத்துடன் மாலியில் தாக்குதலின் போது பலியாகிய இராணுவத்தினரது சடலங்கள் கட்டுநாயக விமான நிலையத்திற்கு கொண்டு வந்து ஐ.நா பாதுகாப்பு சபையின் அனுதாப செய்திகளுடன் அவர்களது உறவினர்களுக்கு கையளிக்கப்படும் என்று இராணுவ தளபதிக்கு மேலும்தெரிவித்தார்.

மேலும் மாலி நாட்டு தாக்குதலின் போது பலியான இரு இராணுவத்தினரது இறுதி மரணச் சடங்கு நிகழ்வில் தானும் தங்களது அலுவலக அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின் போது இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, இராணுவ தலைமையக நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப் திலகரத்ன போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மாலியில் இம்மாதம் (25) ஆம் திகதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளாகி பொலனறுவையை பிறப்பிடமாகவும் கொண்ட 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் தலகொல்லவெவ பொல்பிடிகம பிரதேசத்தைச் சேர்ந்த முதலாவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.எஸ் விஜயகுமார ஆகிய இரு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.

மேலும் மூன்று இராணுவத்தினர் காயமுற்று அருகாமையில் உள்ள மாலி ஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.