(எம்.மனோசித்ரா)

உலக சந்தையில் தற்போது தேயிலை விலை அதிகரித்தே காணப்படுகின்றது. கம்பனிகளும் இதன் மூலம் பாரிய இலாபத்தினை பெற்று வருகின்றன. இவற்றை அறிந்தும் தொழிற்சங்கங்கள் 700 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் கைசாத்திட இணக்கம் தெரிவித்தது ஏன் என்பதே எமது கேள்வியாகும் என ஞானானந்த தேரர் கேள்வி எழுப்பினார். 

1000  ரூபா இயக்கத்தினால் முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொழிற்சங்கங்களின் இந்த காட்டிக்கொடுப்பிற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சார்பில் 1000 ரூபா இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. வறுமையில் வாழும் அந்த மக்கள் தமக்கான சொந்த முகவரி கூட அற்றநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படை உரிமைகள் பற்றி பேசுபவர்களுக்கு இவர்களும் மனிதர்கள் தான் என்பது தெரியவில்லையா?

தேர்தல் காலங்களில் மட்டுமே மலையக அரசியல்வாதிகளுக்கு இவர்கள் நினைவுக்கு வருகின்றனர். வாக்குரிமை மாத்திரமே அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாழ்வதற்கான உரிமை இன்னும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே அரசியல்வாதிகளை தேர்லில் வாக்கு கேட்டு பெருந்தோட்டங்களுக்கு வர வேண்டாம் என தொழிலாளர்களுடன் இணைந்து 1000 ரூபா இயக்கம் எச்சரிக்கின்றது என்றார்.