(எம்.மனோசித்ரா)

இன்று கையெழுத்திடப்படவுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடக் கூடாது எனத் தெரிவித்தும் இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக ' 1000 ரூபா இயக்கம் " பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தற்போது முன்னெத்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் முதலாளிமார் சம்மேளனத்தின் கட்டிடத்திற்கு முன்பாக பொலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்ந ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் இணைந்து வட, கிழக்கில் இடம்பெற்றதைப் போன்று மீண்டுமொரு இன அழிப்பை மேற்கொள்ளவே திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

இதன் மூலம் மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்குவதோடு, பெருந்தோட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிப்பதே இவர்களது நோக்கமாகக் காணப்படுகின்றது. 

 தொழிலாளர்கள் காலா காலமாக நம்பிக்கை வைத்திருந்த தொழிற்சங்கங்களும் அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை வெறும் 20 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதாவது 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்த்தில் அடிப்படை சம்பளம் 500 ரூபாவும், உற்பத்திக் கொடுப்பனவு 140 ரூபாவும், விலைக்கான கொடுப்பனவு 30 ரூபாவும், வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபாவுமாக மொத்த சம்பளம் 730 ரூபா வழங்கப்பட்டது. இவ்வாறிருக்க இம்முறை உற்பத்தி கொடுப்பனவு மற்றும் வருகைக்கான கொடுப்பனவு என்பன வழங்கப்படாமல் விலைக்கொடுப்பனவு 50 ரூபாவும், அடிப்படை சம்பளம் 700 ரூபாவுமாக மொத்த சம்பளம் 750 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது கடந்த முறை வழங்கப்பட்ட உற்பத்தி மற்றும் வருகைக்கான கொடுப்பனவு ஆகிய இரண்டையும் சேர்த்து இம்முறை 200 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என மக்களை திட்டமிட்டு ஏமாற்ற முற்படுகின்றனர். 

பெருந்தோட்டத்தொழிலாளர்களுடைய சந்தா பணத்தில் தொழிற்சங்கங்களை நடத்துபவர்கள் உண்மையில் உணர்விருந்தால் புதிய ஒப்பந்தத்தில் கைசாத்திடக் கூடாது என்பதே எமது கோரிக்கையாகும். 

அத்தோடு இவ்வாறு 700 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டு தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் கீழ்தரமான நோக்கம் ஆகும். 

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தான் தொழிலாளர்கள் தம்மையே நம்பியிருப்பார்கள் என்ற நிலைப்பாடும் தொழிற்சங்கங்களுக்கு காணப்படுகின்றன. எனினும் இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களை அவ்வாறு ஏமாற்ற முடியாது. அவர்கள் விழிப்படைந்துவிட்டனர் என தெரிவித்தார்.