வெனிசூலா மக்களுக்கு இன்று ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவும் தேவையில்லை ; தறிகெட்ட அமெரிக்கத் தலையீடும் தேவையில்லை. தீவிரமடைந்துவரும் பாரதூரமான அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் பிடியில் அந்த நாடு சிக்கித்தவிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். 30 இலட்சத்துக்கும் ( சனத்தொகையில் 10 வீதமானோர்) அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். எஞ்சியிருப்பவர்களில் சுமார் 90 சதவீதமானவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். 

 பொருளாதாரம் விரைவாக சுருங்கிக்கொண்டுபோகிறது. மட்டுமீறிய பணவீக்கம் இவ்வருடம்  10,000,000 சதவீதத்தை எட்டக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்மதிப்புச் செய்திருக்கிறது. உணவு மற்றும் மருந்து வகைகளுக்கு பரந்தளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் போஷாக்கின்மை மற்றும் மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பு கடுமையாக அதிகரித்திருக்கின்றது.கொலைநிகழ்வு வீதம் வானளாவ உயருகின்றது.

மதுரோவினதும் அவரின் நேச அணிகளினதும் கண்காணிப்பின் கீழ்தான் இந்த வீழ்ச்சி இடம்பெற்றது என்றாலும் அவர்கள் அதிகாரத்தின் மீது  இறுக்கமான ஒரு  பிடியைப் பேணினார்கள். 2015 ஆம் ஆண்டில் தேசிய சட்டசபைக்கு ( பாராளுமன்றம்) நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றபோது அதன் அதிகாரங்களை ரத்துச்செய்து அதற்குப் பதிலாக வஞ்சகத்தனமான தேர்தல்களின் ஊடாக தேசிய அரசியல் நிருணயசபையை மதுரோ அமைத்தார். கடந்தவருடம் எதிர்க்கட்சிகளின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் ஏமாற்றுத்தனமான ஜனாதிபதி தேரதலில் அவர் வெற்றிபெற்றார். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள் அல்லது நாட்டைவிட்டுத் தப்பியோடி வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் புகுந்தார்கள் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் அடாத்தாக கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

         

மக்கள் செல்வாக்குமிக்க முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற  ஹியூகோ சாவேஸின் பணிகளையே மதுரோ தொடருகிறார் என்று சிலர் இன்னமும் நம்புகின்ற அதேவேளை சாவேஸின் ஆதரவாளர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். மக்கள் ஆதரவை இழந்த ஜனாதிபதி நீதித்துறையின் மீதான கட்டுப்பாட்டிலும் இராணுவத்தின் ஆதரவிலும் நம்பியிருக்கிறார்.

இந்த நம்பிக்கையிழந்த விரக்தியான சூழ்நிலை பிளவுபட்டுக்கிடந்த எதிரணியை குறைந்த பட்சம் தற்போதைக்காவது ஐக்கியப்படுத்தி, தேசிய சட்டசபையின் தலைவரான ஜுவான் குவாய்டாவைச் சுற்றி அணிதிரளவைத்திருக்கிறது. வயதில் இளையவரும் பெரிதும் அறியப்படாதவருமான குவாய்டா தன்னை பதில் ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்திருக்கிறார். அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரிக்கிறார். வழமையாக எதேச்சாதிகாரத் தலைவர்களை மெச்சுகின்ற ட்ரம்ப் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால், உலகில் மிகப்பெரியளவில் எண்ணெய் கையிருப்பை வைத்திருக்கின்ற வெனிசூலாவின் நெருக்கடியில் அவர் தனது இயல்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தென்னமெரிக்க பிராந்திய அமைப்பான லீமா குழுவின் பெரும்பாலான நாடுகளும் கனடாவும் குவாய்டாவை அங்கீகரித்திருக்கின்றன. இது  வெனிசூலாவின் குழப்பநிலையினால் தோன்றக்கூடிய பரந்தளவிலான ஆபத்துக்களை உணர்த்துவதாக இருக்கிறது. பிராந்திய நாடுகள் வலதுசாரி ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில் வெனிசூலாவில் இந்த ஏற்பட்டிருப்பது குறிப்பாக கவனிக்கத்தக்கது.ஐரோப்பிய ஒன்றியம்  அபிப்பிராயம் எதையும் கூறாமல் ஜாக்கிரதையாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.

ட்ரம்பின் நடவடிக்கை ஆபத்து நிறைந்தது என்பதுடன் வெறுப்பு மனப்பான்மையுடனானதுமாகும். அமெரிக்கா தலைமையிலான தலையீடுகளினதும் நெருக்கடிகளுக்கு இராணுவத் தீர்வுகளைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினதும் பாதிப்புகளின் தாராளமான அனுபவங்களை லத்தீன் அமெரிக்கா கொண்டிருக்கிறது. வெளிப்படையான ஒரு நடவடிக்கையாக கடந்தமாதம் வெனிசூலாவுக்கு இரு குண்டுவீச்சு விமானங்களை அனுப்பிவைத்த ரஷ்யா, அமெரிக்காவின் நடவடிக்கைகள் அனர்த்த விளைவுகளைக் கொண்டுவரக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது. வெனிசூலாவின் மிகப்பெரிய கடனுதவி நாடான சீனா மதுரோவுக்கு ஆதரவாக நிற்கிறது ; துருக்கியும் மெக்சிக்கோவும் கூட அவ்வாறே.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வி. எதிர்க்கட்சிகளின் நோக்கம் இராணுவத்திற்குள் குறிப்பாக, கீழ்மட்டப் படைப்பிரிவுகளை கிளர்ச்சிசெய்யத்தூண்டுவதேயாகும் என்பது தெளிவானது. அதன்விளைவாக இராணுவத்திற்குள் இருக்கும் போட்டிக்குழுக்களுக்கிடையில் மோதல்கள் மூளக்கூடிய ஆபத்து இருக்கிறது.வெனிசூலாவை விட்டுவெளியேறுமாற விடுக்கப்பட்ட உத்தரவை அமெரிக்க இராஜதந்திரிகள் அலட்சியம் செய்தால் என்ன நடக்கும் என்பது அடுத்த பிரச்சினை. மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்காக ட்ரம்ப் இதை பயன்படுத்தக்கூடும் என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.2017 ஆம் ஆண்டில் படையெடுப்பைச் செய்வதற்கு பலதடவைகள் யோசனையை ட்ரம்ப் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

எதிரணியினர் மீது மதுரோ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் அமெரிக்கா முன்னால் சகல  தெரிவுகளும் இருக்கின்றன என்று ட்ரம்ப் இப்போது கூறியிருக்கிறார்.பரேசில் நாட்டின்  தீவிர வலதுசாரியான புதிய ஜனாதிபதி ஜாய்ர் பொல்சோனாரோ தனது ஆதரவு தனது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார். இராணுவத் தலையீடு  பயங்கரமான விளைவுகளைக் கொண்டுவரும்.தற்போதைய குழப்பநிலையை அது மேலும் மோசமாக்கிவிடக்கூடும்.

மதுரோ ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது  வெனிசூலா மீட்சிபெற முடியாது என்பது வெளிப்படையானது.பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்றையும் புதிய தேர்தல்களையும் பெரும்பாலான வெனிசூலா பிரஜைகள் விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெனிசூலா நெருக்கடியில் சம்பந்தப்பட்ட தரப்புகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முன்னைய முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.அரசாங்கத் தரப்பில் வெளிக்காட்டப்பட்ட நம்பிக்கையீனமே அதற்கு பெருமளவில் காரணம். சர்வதேச ஈடுபாடு வெனிசூலா மக்களுக்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவாக அமையக்கூடியதான நிதானமான நடவடிக்கைகளின் வடிவில் இருக்கவேண்டுமே தவிர, முரட்டுத்தனமானதும் ஆபத்தானதுமான தலையீடுகளின் வடிவில் அல்ல.

 ( கார்டியன் ஆசிரிய தலையங்கம், 25 ஜனவரி 2019)