நாட்டில் வடக்கு-கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியினால் மாகாண சபைகளை நடத்தக்கோரிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டது. 

எனினும் இன்றைய விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் பங்குபற்றவில்லை. 

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெருமவினால் மாகாண சபைகளை நடத்தக்கோரிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டது. இதன்போது கலைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையினை பிரதான எதிர்க்கட்சியும், ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் முன்வைத்தன. 

எனினும் நேற்று காலை பிரதான எதிர்க்கட்சி தலைவர் குறித்த பிரச்சினையில் சபையில் வாதாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை  தேர்தல் குறித்த விவாதத்தின் போது சபையில் இருக்கவில்லை. 

மேலும் சிங்கள அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கு தேர்தல் குறித்து சுட்டிக்காட்டி பேசிய போதிலும் கூட வடக்கு கிழக்கு பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விவாதத்தில் கலந்துகொள்ளாது வெளியேறியிருந்தனர். 

எனினும் இ.பி.டி.பியின் பொதுச்செயலாளர் டக்லஸ் தேவானந்தா மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற அழுத்தமாக கோரிக்கையை முன்வைத்து பேசினார்.