பரந்த அளவில் தீவிர அரசியலில் பிரியங்கா காந்தியின் பிரவேசம் அதிர்ச்சிக்குரிய ஒன்றல்ல.தாயார் சோனியா காந்திக்கும் சகோதரர் ராகுல் காந்திக்கும் ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் ரேபறேலி தொகுதியிலும் அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியொன்றை அமைப்பதிலும் அண்மையில் சில மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கங்களை அமைக்கும் முயற்சிகளிலும் அவர் ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறார்.

லோக் சபா தேர்தல்களுக்கு இன்னமும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில்  கட்சி இப்போது அவரை பொதுச்செயலாளராக்கி உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியின் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. புதிய பதவியும் பாத்திரமும் அவரின் கடந்தகால பொறுப்புகளின் விளைவாக இயல்பாக உண்டான உச்சநிலையாக அல்லது  வரவிருக்கும் தேர்தல் சமரில் தனக்கிருக்கும் இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இழந்த தறுவாயில் மேற்கொள்கின்ற  ஒரு முயற்சியாக நோக்கப்படலாம்.

பிரியங்காவை தலைமைத்துவப் பதவிகளுக்கு கொண்டுவரவேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களிடமிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.அவர் முனனெடுக்கக்கூடிய பிரசாரங்கள் உத்தரப்பிரதேசத்திலும் ஏனைய பாகங்களிலும் கட்சித்தொண்டர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து நம்பிக்கையை அதிகரிக்கும்.இவ்வருடத்தைய லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானது.வாரணாசியை உள்ளடக்கிய கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பு பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதிலிருந்து  உத்தரப்பிரதேசத் தேர்தல் போட்டியை எந்தளவுக்கு முக்கியமானதாக காங்கிரஸ் கருதுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் மற்றைய பகுதியின் பொறுப்பு இன்னொரு இளம் தலைவரான ஜோதிரத்திய சிந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையிலான கூட்டணியில் இருந்து புறந்தள்ளப்பட்டதனால் மாநிலத்தில் தனக்கிருக்கக்கூடிய வேறு தெரிவுகளை நாடுவதற்கு காங்கிரஸ் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும். மாநிலத்தில் சகல தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அது தெரிவித்திருக்கிறது.கோராக்பூர் இடைத்தேர்தலில் செய்ததைப் போன்று பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து கொஞ்ச வாக்குகளை காங்கிரஸ் கட்சி இழுத்தெடுத்தால் அது எதிரணியின் பிரதான  நோக்கத்துக்கு உதவுவதாக இருக்கமுடியும்.

ஆனால், ஒரு முகமும் பிரபலமான குடும்பப் பெயரும் மாத்திரம் தேர்தல் போர் ஒன்றை வெற்றிகொள்வதற்குப் போதுமானதல்ல. உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பாகங்களில் காங்கிரஸின் அமைப்பு மற்றும் தேர்தல் இயந்திரங்களை மீளக்கட்டியெழுப்பவேண்டியிருக்கிறது. இது சுலபமான பணியல்ல. குடும்பமொன்றினால் நடத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. வம்ச பதவியுரிமை என்பது நேர்மையானதாே அல்லது ஜனநாயகரீதியானதோ அல்ல.ஆனால், காங்கிரஸுடன் குடும்பக் கலாசாரம் ஒரு பிணி போன்று பிணைக்கப்பட்டுவிட்டது. என்றாலும் அந்த கலாசாரம் காங்கிரஸுக்கு மாத்திரமே பிரத்தியேகமானது என்றும் கூறிவிட முடியாது. பாரதிய ஜனதா கட்சி கூட அதில் விதிவிலக்கானதாக இருக்கவில்லை.

இறுதியில்  வம்ச வழியாக பதவியுரிமை கோருபவர்களை ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ கட்சி உறுப்பினர்களையும் பொதுவில் மக்களையும் பொறுத்த விடயம்.அண்மையில் நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றிகளையடுத்து ராகுல் காந்தியின் தலைமைத்துவம் நம்பிக்கைக்குரியதாக மாறியிருக்கும் நிலையில் -- பொருத்தமான து என்று கட்சி நோக்குகின்ற ஒரு தருணத்தில் பிரியங்காவின் அரசியல் வாழ்க்கை தொடக்கிவைக்கப்பட்டிருக்கிறது ; கணவர் றொபேர்ட் வதேராவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை பிரியங்காவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு பாரதிய ஜனதா நாட்டம் காட்டும் என்கின்ற அதேவேளை, வதேராவுக்கு எதிராக கடந்த ஐந்து வருடங்களில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தினால் இயலாமல் போயிருப்பது பிரியங்காவுக்கு அனுகூலமாக அமையும் எனலாம் ; அத்துடன் அவரைப் பயன்படுத்தவேண்டிய கடுந்தேவையில் காங்கிரஸ் இருக்கிறது. அவ்வாறிருந்தும் கூட தனது ஆற்றலை நிரூபிக்கவேண்டியவராக அவர் இருக்கிறார்.அவரைப் பற்றி கட்சிக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது முகங்கொடுக்கவேண்டிய சவால்கள் மிகப் பெரியவை.

( டெக்கான் ஹெரால்ட் ஆசிரிய தலையங்கம், 25 ஜனவரி 2019 )