கடலில் இருந்து நிலமீட்புப்பணிகள் பூர்த்தியடைந்ததை அடுத்து  கொழும்பு துறைமுகத்துக்கு அருகாக  நிர்மாணிக்கப்பட்டுவரும் சீனாவின் நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத்திட்டம் வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. விரைவில் அது கடல்சார் கட்டமைப்புக்களையும் ஏனைய கட்டமைப்புக்களையும் அமைக்கும் பணிகளுக்கு தன்னைத் தயாராக்கிவிடும். 

கொழும்பு துறைமுக நகரத்திட்டம் படிப்படியாக அதேவேளை, அதிகரித்த வேகத்தில் இலங்கையர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதன் வசதிகளைப் பயன்படுத்துவதற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

" ஆரம்பத்தில் துறைமுக நகரத்திட்டத்தை  முன்னகர்த்துவது சுலபமானதாக இருக்கவில்லை. முதலில் நாம் ஒருவரை மற்றவர் புரிந்துகொள்ளவேண்டும். இதயத்தால் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதிர்ஷ்டவசமாக  அத்தகையதொரு புரிந்துணர்வு நிலையை துறைமுக நகரத்திட்டத்தில் இலங்கையினாலும் சீனாவினாலும் எட்டக்கூடியதாக இருந்தது " என்று அந்த திட்டத்தில் பணிபுரியும் இலங்கையரான பொறியியலாளர் சஞ்சீவ அல்விஸ் தெரிவித்தார்.

 நிறைவுபெற்ற நிலமீட்புப் பணிகள்    

வர்த்தக நகரான கொழும்பின் கரையோரத்தில் கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் துறைமுக நகரம் இலங்கை அரசாங்கத்தினாலும் சீனாவின் கொம்யூனிகேசன்ஸ் கொன்ஸ்ரக்சன் கம்பனியின் துணைநிறுவனமான சீன ஹார்பர் என்ஜனியரிங் கொன்ஸ்ரக்சன்  கொழும்பு  போர்ட சிற்றி லிமிட்டெட்டினாலும் நிர்மாணஞ்செய்யப்பட்டு வருகிறது. திட்டத்தின் நோக்கம் தெற்காசியாவில் வர்த்தக, நிதித்துறை, குடியிருப்பு வசதி மற்றும் சர்வதேச பொழுதுபோக்கு மையமொன்றை உருவாக்குவதேயாகும்.

கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலம் மீட்கப்பட்டிருப்பதாக அந்தப் பணிகள்  நிறைவடைந்ததை முன்னிட்டு இம்மாத ஆரம்பத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வைபவமொன்றில் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு உரையாற்றிய பெருநகரம் மற்றும்  மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இலங்கை முன்னென்றுமே கண்டிராத வகையிலான மிகவும் பிரமிக்கத்தக்க அபிவிருத்தி திட்டமான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஒரு தொழில்நுட்பவியல் அற்புதமாகும் என்று வர்ணித்தார்.

" அடுத்த சில வருடங்களில் இலங்கை மாற்றத்தின் மத்திய நிலையமாகப் போகின்றது. துறைமுக நகரம் எம்மை அந்த அந்தஸதுக்கு உயர்த்தப்போகின்ற மிகவும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகப்போகின்றது. இந்த நகரம் இலங்கையை தெற்காசியாவின் மத்திய நிலையமாக்கப் போகின்றது " என்றும் அமைச்சர் ரணவக்க தமதுரையில் கூறினார்.

2014 செப்டெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக நகரத்திட்ட நிர்மாணப்பணிகள் முழுமையாகப் பூர்த்தியடைய 25 வருடங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவை ஐரோப்பாவுடனும் ஆபிரிக்காவுடனும் இணைக்கும் வர்த்தக மற்றும் உட்கட்டமைப்பு வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சீனாவினால் 2013 ஆம் ஆண்டில்  முன்வைக்கப்பட்ட ( நவீன பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற ) மண்டலமும் பாதையும் (Belt and Road Initiative) என்ற பிரமாண்டமான செயற்திட்டத்தின் ஒரு அங்கமே கொழும்பு துறைமுக நகரத்திட்டமாகும்.

" இந்த திட்டம் நீண்டவரலாற்றைக் கொண்ட சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை உருவகப்படுத்தி நிற்கிறது. எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முதலீட்டின் பெறுமதியை விடவும் கூடுதல் மதிப்புக்கொண்டதாகும்" என்று அந்த வைபவத்தில் கலந்துகொண்ட இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷெங் சியூயுவான் தெரிவித்தார்.   

மேல்நிலையான கோட்பாடு, இம்மியும் பிசகாத தொழில்நுடபம் மற்றும் ஒன்றிணைந்து அணியாகப் பணியாற்றுகின்ற கோர்ப்பரேட் கலாசாரம் ஆகியவற்றுடன் கூடிய துறைமுக நகரத்திட்டம் இலங்கையின் சமூக-பொருளாதார அபிவிருத்தியை முன்தள்ளும். அத்துடன் மக்களின் வாழ்க்கைத்தரங்களையும் மேம்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.  

மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு    

140 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரத்திட்டமே இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டமும் நவீன பட்டுப்பாதையின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற மிகப்பெரிய திட்டமுமாகும். இதில் ஏற்கெனவே 4000 க்கும் அதிகமான தொழில்வாய்ப்புகள் உருவாக்கிக்கொடுக்கப்பட்டுவிட்டன. அடுத்த 20 வருடங்களில் மொத்தம் 83, 000 தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சீனத் தூதுவர் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது. 

இந்த திட்டம் தொழில்வாய்ப்புகளை மாத்திரம் கொடுக்கவில்லை, உயர்ந்த சம்பளங்ளையும் சிறப்பான வாழ்க்கையையும் கூட தருகிறது என்று அதில் வேலைசெய்யும்  உள்ளூர் பணியாளர்கள் கூறுகிறார்கள்.

நிகர தரைப் பரப்பளவு 57 இலட்சத்து 30 ஆயிரம் சதுர மீற்றர்களாகும். இதில் குடியிருப்புகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள், சில்லறை வாணிப நிலையங்கள் மற்றும் அடையாளச் சின்னங்களாக அமையக்கூடிய பரந்த பொழுதுபோக்கு வளாகம் படகுச்சவாரி கால்வாய், மத்திய பூங்கா, மருத்துவ நிலையம், சர்வதேசப் பாடசாலை, மணல் கடற்கரை ஆகியவை அமையும் என்று சீன கொம்யூனிகேசன்ஸ் கொன்ஸரக்க்சன் கம்பனியின் தலைவர் லியூ கிராவோ கூறினார். இவையெல்லாம் துறைமுக நகருக்குள் கட்டிடங்கள் மற்றும் நிலச்சொத்து அபிவிருத்தியில்  முதலீடாக மேலும் ஒரு 1300 கோடி டொலர்களைக் கவர்ந்திழுக்கும் என்று தெரிவித்த அவர் நகரம் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கு மாத்திரம் அல்ல, சர்வதேச ஆற்றல்களையும் நவீன தொழில்நுட்பத்தையும் கூட இலங்கை பெற்றுக்கொள்வதற்கு உதவும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஒழுங்கு விதிகள் அங்கீகாரம்      

" துறைமுக நகரத்துக்கு முதலீடுகளைக் கவருவதற்காக நாம் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பல பாகங்களுக்கும் சென்றுவந்திருக்கின்றோம். பத்துக்கும் அதிகமான சர்வதேச நிறுவனங்கள் இத்திட்டத்தில் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கின்றன " என்று  சீனாவின் ஹார்பர் என்ஜினியரிங் கொன்ஸ்ரக்க்சன் போர்ட் சிற்றி கம்பனியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரதம அதிகாரி லியாங் தோவ் மிங் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள்

மணல் அகழ்வு நடவடிக்கைகளின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் மிகவும் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டன. அகழ்வுப்பகுதியொன்று அல்லது   தூர்வாரும் பகுதியொன்று கரையோரத்திலிருந்து 7.5 கிலோமீற்ற்ர்கள் தொலைவிலேயே வழமையாக தெரிந்தெடுக்கப்படுகிறது. உள்ளூர் சுற்றுச்சூழல் அமைவு குறிப்பாக கடல்வாழ் உயிரினஙகள் மீதான தாக்கம்  சாத்தியமானளவு குறைந்தபட்சமாக இருப்பதை உறுதிசெய்துகொள்வதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது என்று மணல் அகழ்வு கப்பல் அணியின் கப்டன் சின் ஹாய் லோங் தெரிவித்தார். அலைதாங்கிச் சுவர் கட்டப்படுவதற்கு முன்னதாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மணல் அகழ்வுப் பகுதியில் வண்டல் தடுப்பு அணைகள் போடப்பட்டன.

அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த பிரமாண்டமான திட்டத்தினால் தங்களது சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து ஆரம்பத்தில் கவலைப்பட்டார்கள். ஆனால்,  காற்றோட்டத்தின் தரம், சத்தம், அதிர்வு மற்றும் நீரின் தரம் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தேவைகளை கொந்தராத்துக்காரர்கள் உகந்த முறையில் நிறைவேற்றுவதை  உறுதிசெய்வதில் உள்ளூர் அதிகாரிகள் ஆழ்ந்த கவனம் செலுத்திச் செயற்பட்டார்கள் என்று துறைமுக நகரத்திட்ட சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சிரேஷ்ட பொறியியலாளர் நூறுல் அலீம் தெரிவித்தார்." இப்போது சுற்றுச்சூழலுக்கு எந்தப்பாதிப்பும் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்துக்கு துறைமுகநகரம் முழுமையாகப் பயன்தரும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள் " எனறு அவர் கூறுகிறார்.

துறைமுக நகரத்திட்டத்தையும் சுற்றுச்சூழல் மீதான அதன் தாக்கத்தையும் கண்காணிக்க 26 அரசாங்க அமைப்புகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்தார்.    

கொழும்பு காலிமுகத்திடலில் காற்றாடி விற்கும் ராவா என்பவர் 2016 அக்டோபரில் கடலில் மண் அகழும் பணிகள் தொடங்கப்பட்ட தினத்திலிருந்து அனேகமாக ஒவ்வொரு நாளும் சீன மண் அகழ்வுக் கப்பல்கள் மண்ணை வாரிக்கொட்டுவதை பார்த்திருக்கிறார். அந்தக் கப்பல்கள் அங்கிருந்து விரைவில் செல்லவிருப்பதை அறிந்ததும் அவர் இனிமேல் அந்தக் காட்சியைக் காணமுடியாது என்று ஆதங்கப்பட்டார். எப்படியென்றாலும் துறைமுக நகரம் எதிர்காலத்தில் எனது பிள்ளைகளுக்கு பயனைத்தரும் என்று அவர் ஆறுதலடைகிறார்.

(சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்காக  ஷூ ரூய்கிங், ராங் லூ, ஷென் யியான் என்ற செய்தியாளர்கள் கொழும்பு வந்து நிலைவரங்களை ஆராய்ந்த பின்னர் எழுதியது)