(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

மலையக தமிழர் ஒன்றும் தீண்டத்தகாத இனமல்ல, இந்த நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள் எமது மலையக மக்கள். அவர்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு போராட்டத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க தமிழர் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். 

மலையக மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களின் போராட்டத்திற்கு  நாம் ஆதரவு வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.  

மலையக மக்களின் சம்பள பிரச்சினை குறித்து இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

எமது மலையக மக்களின் சம்பள பிரச்சினை மிகப்பெரிய  பிரச்சினையாக உள்ளது. எமது மலையக மக்கள் எதோ தீண்டத்தகாத மக்கள் என்ற நிலையே இங்கு ஒருசிலருக்கு உள்ளது. ஆனால் அவர்கள் தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்த மக்கள். 

எமது நாட்டின் முதுகெலும்பு. மலையகத்தின் பிரதான உரித்தாளர்கள். அவர்கள் இந்திய மக்கள் என்று பாகுபாடு படுத்தினால்,  இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்திய வம்சாவளியினர் தான். 

இலங்கையில் ஒரு சில குழுக்களை தவிர அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான். ஆகவே இந்த பாகுபாட்டினை கைவிட வேண்டும். மலையகத்தில் வாழும் தமிழர்  இந்திய வம்சாவளியினர் என்ற கருத்தினை  நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம்.  

எனினும் வடக்கில் வன்னி, கிளிநொச்சி பகுதிகளில்  ஆரம்பத்தில் குடியேற்றப்பட்ட மக்களை மலையக மக்கள் என்ற வர்க்க பாகுபட்டினை காட்டி அவர்கள் தனி இனமாக ஒருசில அரசியல் வாதிகளினால் சுட்டிகாட்டி வருகின்றனர். இது மிகவும் மோசமான நிலைமையாகும்.