(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வரலாற்றில் நூற்று ஐம்பது ஆண்டுகளாக உரிமையை, அந்தஸ்தை, அடையாளத்தை, அடிப்படை  உரிமைகளை பறித்து தண்டிக்கப்பட்ட மலையக மக்களுக்கு இப்போதாவது நட்டஈட்டு வழங்க வேண்டும் என நினைத்தால் அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி மடுத்து அடிப்படை சம்பளத்தை வழங்கவேண்டும். இலங்கையர் என்ற உணர்வில் சிந்திக்கும் அனைத்து நபர்களும் தொழிலாளர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார். 

22 கம்பனிக்கார்களின் நோக்கங்களுக்கு அரசாங்கம் அடிபணிய வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

மலையக தோட்டத் தொழிலாளர்களின்  ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதுடன் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுகொடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயகவினால் இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் சபையில் மேலும் கூறியதானது, 

இன்று நாட்டில் மலையக மக்களின் போராட்டம் நாடளாவிய ரீதியில் பரவி வருகின்றது. குறிப்பாக கொழும்பில் வசிக்கும் மலையக இளைஞர்களின் ஈடுபாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் அதேபோல் ஹட்டன், பொகவந்தலாவை உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்களும் கடந்த ஆண்டு இறுதியில் வேலை நிறுத்த போராட்டங்களும் இடம்பெற்றது.

இன்றும் மலையக பகுதிகளில், கொழும்பில் மற்றும் பல்கலைக்கழகங்களில் அவர்களின் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து ஆறு கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளின் மூலமாக எந்த நலனும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

 மலையக மக்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் நியாயமான போராட்டமாகும். மலையகதில் வாழும் மக்கள் எமது நாட்டில் வாழும் எமது மக்கள் என்ற நிலையை உணர்ந்து, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் சலுகைகள் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தால் இவர்களின் போராட்டத்தை எம்மால் புறக்கணிக்க முடியாது. 

இந்த நாட்டின் அரசாங்கம் நிறுவனங்களின் நலன்களை விடவும் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஆனால் அரசாங்கம்  மக்களின் நிலைமையை கருத்தில் கொள்ளவில்லை என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.  நாம் இவர்களுக்காக உள்ள தலைவர்கள் என்றால் இவர்களின்  கோரிக்கையை எம்மால் நிராகரிக்கவே முடியாது.