(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் முறைமையை மாற்றி ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கொண்டுவந்த பிரேரணையை  வழிமொழிந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 400ரூபா என அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மாற்றத்தை ஏற்படுத்தி ஆகக்குறைந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கவேண்டும். பெருந்தோட்டம் சிறுதோட்டம் என பிரித்து செயற்பட்டு வருகின்றது. பெருந்தோட்டங்கள் தமிழ் மக்களுக்கும் சிறுதோட்டங்கள் சிங்கள மக்களுக்கும் என வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் சிறுதோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் வசதிகள் பெருந்தோட்ட மக்களுக்கு இல்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை இனவாதக் கண்டுகொண்டு பார்க்கவேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன். சிறுதோட்ட மக்களுக்கு 2ஏக்கர் காணி கொடுக்க முடியுமானால் ஏன் அதனை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கமுடியாது. இதற்கு இந்த பாராளுமன்றத்தில் சட்டம் அமைக்கப்படவேண்டும்.