( ஹஷான் இராஜதுரை)

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கத் தவறினால், அவர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம கூறியிருக்கிறார்.

இவ்வருட இறுதியில்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னர் தற்போதைக்கு அது நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. தேர்தலுக்கான நேரம் வரும்போது பொருத்தமான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று ஊடகங்களுக்கு கூறிய துணிச்சலுடன் விடயங்களைப் பேசுகின்றவர் என்று பெயரெடுத்த வெல்கம கொலைகார வரலாற்றைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக்கப்படக்கூடாது. பதிலாக ஜனநாயகத்தையும் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளையும் மதிக்கின்ற ஒருவரே வேட்பாளராக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு வேட்பாளரை நாம் நிறுத்தத் தவறினால் அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப்பெறமுடியாமல் போகும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தாங்கள் தயாரென்று பலர் ஏற்கெனவே அறிவித்துவிட்டதால் ஜனாதிபதி வேட்பாளர் என்பது இப்போது ஒரு ஜோக் ஆகப்போய்விட்டது " என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவை ஆதரிக்கப்போவதில்லை என்று வெல்கம பலதடவைகள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.