ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் (Halimah Yacoob) அம்மையாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.

சிங்கப்பூரின் இஸ்தானா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை, சிங்கப்பூர் ஜனாதிபதி சிநேகபூர்மாக வரவேற்றார், அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் காணப்படும் இருதரப்பு தொடர்புகளை பலமாக  முன்னெடுத்து செல்வது தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன், அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தற்போது இலங்கை முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருள் தொடர்பில் இலங்கை முகங்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வலுவான வேலைத்திட்டங்களுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.