அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

 

இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி இன்று காலை 8.30 மணிக்கு பிரிஸ்பன் கப்பா மைதா­னத்தில் ஆரம்பமானது. 

பகலிரவு ஆட்டமாக இடம்பெறும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதற்கிணங்க ஆடுகுளம் புகுந்த இலங்கை அணி வீரர்கள் சோபிக்காத காரணத்தினால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 56.4  ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸுக்காக 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 24 ஓட்டத்தையும், லஹிரு திரிமன்ன 12 ஓட்டத்தையும், அணித் தலைவர் சந்திமால் 05 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 14 ஓட்டத்தையும், ரோஷான் சில்வா 09 ஓட்டத்தையும், தனஞ்சய டிசில்வா 05 ஓட்டத்தையும், நிரோஷன் திக்வெல்ல 64 ஓட்டத்தையும், தில்றூவான் பெரேரா ஒரு ஓட்டத்தையும், சுரங்க லக்மால் 7 ஓட்டத்தையும், துஷ்மந்த சாமர எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழந்ததுடன், ஆடுகளத்தில் லஹிரு குமார ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும் ஜெய் ரிச்செர்ட்சன் 3 விக்கெட்டுக்களையும், மிச்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுக்களையும், நெதன் லியோன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இனனிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி எதுவித விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களை குவித்துள்ளது. ஆடுகளத்தில் மார்கஸ் ஹாரிஸ் 5 ஓட்டத்துடனும், ஜோ பேர்ன்ஸ் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.