சசிகலா விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது, தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்திய தகவல் அறியும் சட்ட மூல ஆர்வலர் குறிப்பிட்டுள்ளதாவது,

சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறையில் எந்த கைதிகளுக்கும் உணவுகளை சமைக்க அனுமதி கிடையாது. அப்படியிருக்க சசிகலாவுக்கு சமையல் அறை மற்றும் சமைப்பதற்கு ஒரு பெண் கைதியும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறை அலுவலர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கும்பலாக வருவதும், நேரடியாக அவரது அறைக்கு சென்று அவருடன் பேசுவதையும் வழமையாக கொண்டுள்ளனர்.

இதற்கு முன் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் 2 கோடி (இந்திய ரூபா) லஞ்சம் பெற்றதாகவும், சிறை விதிகளை மீறி சசிகலாவுக்கு 4 விசேட அறைகள் ஒதுக்கப்பட்டதும், அவர்களுக்கு தனி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும், மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட சசிகலாவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது போன்ற விதி மீறல்கள் நடந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விணய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்திருந்தது.

அந்தக் குழு இது குறித்து முழு விசாரணை நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை சமர்பித்திருந்தது. அந்த அறிக்கையின் தகவல்களே தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரூபா, “தான் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றார்.

இந் நிலையில் இது தொடர்பில் கர்நாடக மாநில காவல்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடான சந்திப்பின்போது, “பரப்பன அக்ரஹாரா சிறையில் எழுந்த புகார் குறித்து விசாரணை குழு அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கவனித்தேன். ஊடகங்களிலும் இதுபற்றி வெளியானதை பார்த்தேன். சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.