கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் தொடர்புபட்ட கடத்தல் நடவடிக்கைகள் தெர்க்மினிஷ்தான் நாட்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. 

கொள்ளுப்பிட்டி, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவீன சந்தை கட்டடத் தொகுதி ஒன்றிலும், சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிலும் நேற்றுமுன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே 115 கோடி ரூபா பெறுமதியான 95 கிலோ 88 கிரேம் ஹெரேயான் கைப்பற்றப்பட்டது.

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு அமெரிக்க பிரஜைகள், ஒரு ஆப்கான் பிரஜை உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட ஐவரிடம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந் நிலையிலேயே குறித்த கடத்தல் நடவடிக்கையில் முக்கியஸ்தர்களாக செயற்பட்ட மேலும் இருவர் தெர்க்மினிஷ்தானை சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.