முல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நாளைய தினம் பௌத்த பிக்கு மற்றும் பிள்ளையார் ஆலயத்தினருக்கும் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கபட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று புத்தர் சிலை திறக்கப்படுவதை அறிந்து செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த விகாரை பிக்குவாலும் புல்மோட்டை அரிசிமலையிலிருந்து வருகைதந்த பிக்குகளாலும் இடையூறு ஏற்படுத்தபட்டது.

மேலும் நேற்றையதினம் தகவலறியும் சட்டம் மூலம் ( RTI ) பெற்ற தகவல்படி பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பியது என நாயரு விகாராதிபதி மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பினார் .

பொலிசாரும் பிக்குகளும் இணைந்து நீண்டநேரம் குறித்த ஊடகவியலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செய்தி சேகரிக்கவிடாது  தடைகளை ஏற்படுத்தினர் .அத்தோடு குறித்த ஊடகவியலாளரை பொலிசாரும் பிக்குகளும் இணைந்து புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.