கொழும்புக்கு வெளியில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் உள்ள விமானங்களுக்கு இடையில் சரக்குகளை நகர்த்துவதற்கான மாற்றுதல் நடவடிக்கையொன்றை ஜனவரி மாதம் 21 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க கடற்படை மேற்கொள்ளவுள்ளது. 

சேவை வழங்கல்கள் மற்றும் வர்த்தகத்துக்கான பிராந்திய மையமாக உருவாவதற்கான இலங்கையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் பாரிய தற்காலிக சரக்கு மாற்றுதல் முன்னெடுப்பொன்றின் அங்கமாக இது அமைந்துள்ளது. 

ஜனவரி மாதத்திலான இந்த சரக்கு மாற்றங்களானது இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏறக்குறைய 25 மில்லியன் ரூபா பங்களிப்பை வழங்கவுள்ளது. 

தற்காலிக சரக்கு மாற்றுதல் முன்னெடுப்பின் 3 ஆவது மறுசெய்கை இதுவாகும். 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலும் மற்றும் திருகோணமலையிலும் அதேபோல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலும் நடைபெற்ற இரு வெற்றிகரமான மாற்றுதல்களின் அடுத்த கட்டமாகவே இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

“இந்து-பசுபிக் பிராந்தியத்தின் இணைப்பு புள்ளியிலுள்ள இலங்கையின் இருப்பிடத்தை பிரதிபலிக்கும் மற்றும் இந்த தனித்துவமான இருப்பிடம் வழங்கும் வாய்ப்புகளை இறுக பற்றிக் கொள்ளும் நாட்டின் பிராந்திய ஈடுபாட்டுக்கான தங்களது நோக்கு பற்றி இலங்கையின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்,” என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார். 

“இந்து-பசுபிக் பிராந்தியத்தின் பரபரப்பான கடல் பாதைகள் வழியாக அடிக்கடி போக்குவரத்தில் ஈடுபடும் அமெரிக்க இராணுவ மற்றும் வர்த்தக கப்பல்களுக்கு உதவியளிக்க இலங்கையின் சேவைகள் மற்றும் பொருட்களை ஒப்பந்தம் செய்தல் போன்ற பரஸ்பரம் அனுகூலமிக்க பல்வேறுபட்ட முன்னெடுப்புகள் ஊடாக இந்த நோக்கத்திற்கு உதவுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முன்னெடுப்பின் கீழ் பல்வேறு அமெரிக்க கடற்படை விமானங்கள் இந்த வர்த்தக விமானநிலையத்தில் தரையிறங்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதுடன், உயிருக்கு ஆபத்தில்லாத பல்வேறுபட்ட விநியோகங்களையும் கொண்டு வரவுள்ளன. இந்த விநியோகங்கள் விமானங்களுக்கு இடையில் மாற்றம் செய்யப்படும் என்பதுடன், அதன் பின்னர் கடலில் இருக்கும் யூ.எஸ்.எஸ். ஜோன் சீ. ஸ்டென்னிஸ் (U.S.S. John C. Stennis) விமானம் தாங்கி கப்பலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

கடற் படையினருக்கான தனிப்பட்ட தபால்கள், காகித பொருட்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் கருவிகள், மற்றும் ஏனைய பொருட்கள் இந்த விநியோகங்களில் உள்ளடங்கியிருக்கும். இந்த  முன்னெடுப்புடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு சரக்கோ, இராணுவ உபகரணமோ அல்லது படையினரோ சரக்கு மாற்றுதல் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் எஞ்சியிருக்கப் போவதில்லை.

அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பானது, இரு நாடுகளினதும் திறன்கள் மற்றும் இயங்குதன்மையை அபிவிருத்தி செய்யும் பல்வேறுபட்ட கூட்டு பயிற்சிகள் மற்றும் பயிற்சியளிப்புகளை கொண்டதாக இருக்கிறது. இந்த ஒத்துழைப்பானது, மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம் மற்றும் கடற்பிராந்திய எல்லை விழப்புணர்வு போன்ற எமது பரஸ்பர பாதுகாப்பு நலன்களை தீர்த்துக் கொள்வதற்காக இரு நாடுகளினாலும் வடிவமைத்துக் கொள்ளப்பட்டதாகும்.