(ஆர்.விதுஷா)

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெலே சுரங்க எனப்படுபவரின்  நெருங்கிய சகா உட்பட  பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.

   

குறித்த கைது நடவடிக்கை பேலியகொடை குற்றத்தடுப்பு   பிரிவினரால்  நேற்று  பிற்பகல்  வேளையில் இடம் பெற்றுள்ளதுடன்,   சந்தேக நபர்களிடமிருந்து  5 கிராம்  220 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார்  மேலும்  குறிப்பிட்டனர்.  

மேற்படி சந்தேக நபர்கள்   ஜா-எல பகுதியில்   ரிவோல்வர் ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு  தங்க ஆபரண நிலையத்தை கொள்ளையிட்டமை  மற்றும்  கெசல்வத்தை பகுதியின்  புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில்  வைத்து  வெல்லே சாரங்க என்பவரை  கொலை செய்ய முயற்சித்தமை  மற்றும் கொலை முயற்சிக்கு உதவிபுரிந்தமை ஆகிய குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில்  சந்தேக நபர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட  மேலதிக விசாரணைகளுக்கமைய  சந்தேக நபர்  ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய  வெல்லே சுரங்கே எனப்படுபவரின் நெருங்கிய சகா என  ஆரம்பகட்ட விசாரணைகளின் போது  தெரிய வந்துள்ளது.  

29 வயதுடைய  ஹெந்தளை , வத்தளை பகுதியை சேர்ந்த  மஹவத்தகே ஒருவரும் 26 வயதுடைய  ஹெந்தளை , வத்தளை பகுதியை சேர்ந்த  பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் ,சந்தேக நபர்களை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பேலியகொடை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.