ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிங்கபூரில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் அதிகரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரை நிகழ்த்துவதற்காகவே ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதிவரை சிங்கப்பூரில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி ஹலிமா யாக்கோ வழங்கும் விருந்து உபசாரத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

அத்துடன், அந்த நாட்டு பிரதமர் லீ ஷியான் லூங்குடான் இரு தரப்பு கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக சிங்கபூர் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இன்று காலை 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.