2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா, ஆஷ்லோ பார்ட்டியை வீழ்த்தி இரண்டாவது முறையாகவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

8 ஆம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஆஷ்லே பார்ட்டியை வீழத்தினார்.

கிவிடோவாவின் இந்த வெற்றியின் மூலம், 4 ஆவது சுற்றுடன் வெளியேற்றப்பட்ட சிமோனா ஹாலெப்பின் (ருமேனியா) ‘நம்பர் ஒன்’ இடம் பறிபோனது. 

அதாவது இப்போது ஹாலெப்பின் தரவரிசை புள்ளிகளை கிவிடோவா கடந்து விட்டார். ஆனாலும் கிவிடோவாவுக்கு ‘நம்பர் ஒன்’ இடம் கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது. 

காரணம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் முடிவுக்கு பிறகே யார் ‘நம்பர் ஒன்’ என்பது தெளிவாகும். 

மேலும் ஓர் காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் 35 வது இடம் வகிக்கும் டேனியலி கொலின்ஸ் (அமெரிக்கா) 2-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவை (ரஷியா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.