இளம் பிக்கு ஒருவர், சிரேஷ்ட பிக்கு ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், காலி அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் பதிவாகியுள்ளதோடு பிரதேச மக்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் உள்ள சிரேஷ்ட பிக்கு ஒருவர் அங்கிருந்த இளம் பிக்கு ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை அறிந்த பிரதேச மக்கள் உடனடியாக 119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி பிரிவுக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சிறுவனான பிக்குவை மீட்டு பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இளம் பிக்குவின் உடலில் பெல்ட் மற்றும் வயர்களை கொண்டு தாக்கிய அடையாளங்கள் இருந்துள்ளன.

எனினும் சிறுவன் பிக்குவை தாக்கிய சிரேஷ்ட பிக்குவை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தை மூடிமறைக்குமாறு விகாரையில் உள்ள தலைமை பிக்குகள் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாகவே குறித்த பிக்குவை கைது செய்யவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை குடிபோதையில் இருந்த தந்தையினாலே இளம் பிக்கு தாக்கப்பட்டுள்ளார் என சிரேஸ்ட பிக்குகள் தெரிவித்துள்ளனர்.