(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் அரசியல் சூழச்சி இடம்பெறாமல் இருந்திருந்தால்  விசாரணை ஆணைக்குழு சட்டமூலம் மூன்று மாதங்களுக்கு முன்னரே அமுல்படுத்தப்பட்டிருக்கும். கடந்தகால குற்றவாளிகளும் இதன் மூலம் தண்டிக்கப்படுவார்கள். 

அத்துடன் விசாரணைக்குழுவின் அறிக்கைகளை நீதிமன்றங்களும்  சாட்சியங்களாக பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்கமுடியும் என  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

1948ஆம் காலப்பகுதியில் இருந்து விசாரணைக்குழு அமைப்பது தொடர்பான சட்டம் இருந்து வருகின்றது. தற்போது அந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நாட்டில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பாக விசாரணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த காலங்களிலும் இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த விசாரணைகளின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. 

அத்துடன் தற்போது திருத்தப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு சட்டமூலம் ஊடாக ஆணைக்குழுக்களுக்கு வழக்கு தொடரும் அதிகாரம் கிடைக்கின்றது. இவ்வாறான சட்ட அதிகாரம் கடந்த காலங்களில் ஆணைக்குழுக்களுக்கு இருக்கவில்லை. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இந்த சட்ட அங்கிகாரம் ஆணைக்குழுக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன.

மேலும் இந்த திருத்தச்சட்டமூலமானது மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணையை தாமதப்படுத்தவே மேற்கொள்ளப்படுவதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியர் சூழ்ச்சி இடம்பெறாவிட்டால் இந்த சட்டமூலம் மூன்று மாதங்களுக்கு முன்னறே நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்த அரசியல் சூழ்ச்சி எந்த நோக்கத்துக்கு மேற்கொள்ளப்பட்டது என்பது தற்போது மக்கள் உணர்ந்துள்ளளர்.  

மேலும் விசாரணை ஆணைக்குழுக்களில் சாதாரண குற்றவாளிகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுமே விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலணி பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தான பணிப்பாளர் போன்றவர்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றது. விசாரணைகளை தாமதப்பத்தும் நோக்கம் எங்களுக்கில்லை. விசாரணைகளை துரிதப்படுத்துமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம்.

அத்துடன் எங்களுக்கு எதிராகவும் சிலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் டொப் 10 என்று முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கு நாங்கள் அஞ்சவில்லை. எமக்கெதிரான முறைப்பாடுகள் தாமதிக்கப்படுவது எங்களுக்கும் பிரச்சினையாக இருக்கின்றது. 

கடந்த காலங்களில்போன்று யாரையும் பழிவாங்கும் நோக்கில் இந்த ஆணைக்குழுக்களை நாங்கள் அமைக்கவில்லை. அத்துடன் தற்போது திருத்தப்பட்டிருக்கும் விசாரணை சட்டமூலம் ஊடாக ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை சாட்சியமாகக்கொண்டு நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கமுடியும். அதேபோன்று கடந்த காலங்களில் விசாரணை ஆணைக்குழுக்களில் விசாரிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடுக்க முடியுமாகின்றது என்றார்.