இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 38 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது நியூஸிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந் நிலையில் நேப்பியரில் இன்று ஆரம்பமான முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் மற்றும் முன்ரோ களமிறங்கி துடுப்பெடுத்தாடி முதல் ஓவருக்காக 5 ஓட்டங்களை பெற்றனர்.

இரண்டாவது ஓவருக்காக மொஹமட் ஷமி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள 5 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய குப்டீல் அதே ஓவரின் 5 ஆவது பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவருக்கு அடுத்தபடியாக முன்ரோவும் 8 ஓட்டத்துடன் 3.3 ஆவது ஓவரில் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் போல்டானர். இதற்கு அடுத்தபடியாக 2 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் வில்லியம்சன் மற்றும் ரோஷ் டெய்லர் ஜோடி சேர்ந்தாட இந்திய அணி 10 ஓவர்களின் நிறைவில் 34 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் வில்லியம்சன் 6 ஓட்டத்துடனும் டெய்லர் 14 ஓட்டத்துடனும் இருந்தனர்.

தொடர்ந்து நியூஸிலாந்து அணி 13.3 ஆவது ஓவருக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களை பெற, டெய்லர் 24 ஓட்டத்துடன் சாகலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற அவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் புகுந்த டொம் லெதமும் 11 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி 22.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. இருப்பினும் அடுத்தடுத்த ஆட்டமிழப்பு காரணமாக நியூஸிலாந்து 38 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதன்படி நிக்கோலஸ் 12 ஓட்டத்துடனும், மிச்செல் சான்டர் 14 ஓட்டத்துடனும், வில்லியம்சன் 64 ஓட்டத்துடனும், பிரக்வெல் 7 ஓட்டத்துடனும், லொக்கி பெர்க்சன் டக்கவுட் முறையிலும், டிரன் போல்ட் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும், சாஹல் ஒரு விக்கெட்டுக்களையும் மற்றும் கேதர் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 158 ஓட்டம் நிர்ணியிக்கப்பட்டது. 158 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை எதுவித விக்கெட் இழப்பின்றி  4 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஆடுகளத்தில் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகி‍யோர் தலா 2 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.