படைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மேற்கொண்டு வருகின்றது. இதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கை நாட்டுக்கு வெளிப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான பணிகள் நிறைவடைந்த பின்னர் நிலையியியற் கட்டளை 27/2 கீழ்  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஒவ்வொரு தடவையும் அவர்களின் பொருளாதார கொள்கைகளுக்கமைய விவசாயத்திற்கு மிகவும் குறைந்தளவான கவனிப்பே வழங்கப்படுகின்றது. தற்போது நாட்டில் வேகமாக பரவும் படைப் புழுக்களை ஒழிப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருக்கின்றன.  இந்த படைப் புழுக்கள் நாட்டில் பல பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக அரசாங்கம் பொறுப்பின்றி  செயற்படுவதால் சாதாரண விவசாயிகள் தாங்களே முன்வந்து பல்வேறு பீடை நாசினிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் அக்கறையின்றி இருப்பது தொடர்பாக கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். 

தற்போது விவசாயிகள் தமது பயிர் செய்கையை செய்ய முடியாது வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் படைப் புழுக்களை ஒழிப்பதற்காக அரசாங்கம் நேரடியாக தலையிட நடவடிக்கையெடுக்க வேண்டும். படைப் புழுக்களின் பரவல் எச்சரிக்கை காணப்படும் பயிர் செய்கைகள் மற்றும் பிரதேசங்கள் தொடர்பாக விவாசாயிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . 

அத்துடன் படைப் புழுக்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக மதிப்பீடுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் , பாதிக்கப்பட்ட விவசாயிகளினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் அனைத்தையும் நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். 

மேலும்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த போகத்திற்கு பயிர் செய்வதற்கான விதைகளையும் உரத்தையும் வழங்குமாறும் அதேபோன்று அடுத்த போகம் வரை வாழ்க்கைச் செலவு உதவிகளை வழங்குமாறும்  கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.