ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.

புகையிலை, மதுசாரம் உள்ளிட்ட போதைப்பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் அவற்றிற்கு அடிமையாகுவதை தடுக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் பிரதான செயற்பாடாக போதைப்பொருட்கள் பற்றிய சரியான புரிந்துணர்வினை பெற்றுக்கொடுத்தல் அமைந்துள்ளது.

இந்த போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தில் இடம்பெறும் மாணவர்களை மையப்படுத்திய நிகழ்ச்சிகளுக்காக மாணவ மாணவிகள் மாத்திரமன்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போன்ற பாடசாலை சமூகத்துடன் இணைந்த அனைவரும் பங்கேற்கவுள்ளனர். வாரத்தின் முதல் நாளான நேற்றைய தினம் வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதுடன், இரண்டாம் நாளான இன்றைய தினம் பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சின் உளநல சுகாதாரப் பிரிவினால் இன்றை தினத்தின் செயற்பாடுகள் நெறிப்படுத்தப்பட்டதுடன், நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.

பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு பழக்கப்படுவதற்கு ஏதுவான பெற்றோரின் புறக்கணிப்பு  மற்றும் ஏனைய காரணங்கள் இதன்போது பிள்ளைகளாலேயே பெற்றோர்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட்டமை முக்கியமானதாகும்.

இதன் தேசிய வைபவம் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் மருத்துவர் சமந்த கித்தலவஆரச்சியின் தலைமையில் இன்று (22) முற்பகல் கொழும்பு சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

உளநல சுகாதார சேவை பணிப்பாளர் திருமதி. சித்ரமால் டி சில்வா உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.