இந்தியாவின் தமிழகத்தில் கணசனுக்கு  மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த சுரேஷ், சொந்தமாக 2 லொரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா, பிள்ளைகள் ராகுல் மற்றும் உதயா, இவர்களுடன் சுரேஷின் தாயும் வசித்து வருகிறனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் மீன் வாங்கிக் கொடுத்துவிட்டு, மதியம் சமைத்து வைக்கும்படி கூறிவிட்டு சென்ற  பின்  பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்றுவிட அவரது தாயும், மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று பகல் குடிபோதையில் வீடு திரும்பிய சுரேஷ், மீன்குழம்பை ருசிக்க வேண்டும் என்ற ஆசையில் வீடு திரும்பினார்.

இதற்கிடையே சலவை இயந்திரம் பழுதாகிவிட துணிகளை கையால் துவைத்ததால் மீன் குழம்பு வைக்கத் தாமதமாகியுள்ளது என மனைவி கூற கோபத்தில் சுரேஷ் சண்டையிட, சத்யாவின் கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சத்யா வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு பற்றவைத்துள்ளார். உடனே சுரேஷ் தானும் தீக்குளிக்கப் போவதாக வம்பு செய்துள்ளார், கடும் ஆத்திரத்தில் இருந்த சத்யா, வீட்டின் கழிவறைக்கு சென்று உடலில் தீ வைத்துக் கொண்டார்.

தீ முழுவதும் பற்றிய நிலையில் சத்யா வெளியே ஓடி வர, சுரேஷ் காப்பாற்றுவதற்காக சத்யாவை தூக்கியுள்ளார்.

இதில் சுரேஷின் உடலிலும் தீப்பிடித்தது, இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு சுரேஷ் தாய் கதற அக்கம்பக்கத்தினர் உதவியுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.