(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஒரு சில கஞ்சா கடத்தல் காரர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தன்னுடைய பாதுகாப்பிற்காகவும், தனது குடும்ப பாதுகாப்பிற்காகவும் எனது துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே சபையில் தெரிவித்தார். 

தமிழ், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் தனக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை. எனினும்  சிங்கள மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்ற பகுதியில் சிங்கள மக்களால் எனக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில்  இன்று  செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி கருத்துரைத்த அவர்,

தன்னைக் கொல்லுவதற்கு முயன்ற நபர் திருகோணமலை பிரசேதத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர். அவரின் மூலமாக எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் நிலவி வருகின்றது. அந்த அச்சுறுத்தலின் பின்னால் அரசியல் இல்லை. அவர் ஐக்கிய தேசியக் கட்சியோ.  சுதந்திரக் கட்சியோ,  ஜே.வி.பியோ அல்லது  முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய எந்தவொரு கட்சியையும்  சேர்ந்தவரில்லை.  

எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக சேவையை முன்னெடுப்பதற்குச் செல்லும் போது எனக்கோ அல்லது  என்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கோ அல்லது என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளின் உயிருக்கோ  அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படக்கூடுமாயின் எனக்கு  வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய நிலைமை உருவாகும் எனவும் குறிப்பிட்டார்.