(எம்.மனோசித்ரா)

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் சுதந்திரதினத்தன்று அரசியலமைப்பிற்கிணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதாக வாக்குறுதியளித்துள்ளார். 

எனவே பெப்ரவரி 4 ஆம் திகதி ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக பொதுபல சேனா தேசிய அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வித்தாரந்தெனிய தேரர் தெரிவித்தார். 

இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்ம விகாரையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாலொன்றை மேற்கொள்ள வேண்டும் என எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்று  காலை நாம் ஜனாதிபதியை அவருடைய உத்தியோகபூர்வ இலத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். 

இந்த சந்திப்பின் போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து மஹாநாயக்க தேரர்களது கடிதங்களையும் ஏனைய அமைப்புக்களின் கடிதங்களையும் அவரிடம் கையளித்துள்ளோம். அதேவேளை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  

இந்த விடயம் தொடர்பில் தான் அதிர்ச்சியடைவதாகவும், எவ்வாறிருப்பினும் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதாகவும் ஜனாதிபதி எமக்கு உறுதியளித்தார்.