கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் மிக முக்கிய மூன்று விருதுகளை பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அதன்படி கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டு, சேபர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு ஒரேயாண்டில் மூன்று விருதுகளை கைப்பற்றிய முதல் வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

30 வயதாகும் விராட் கோலி கடந்த 2018 ஆம் ஆண்டு 14 சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸுக்களில் களமிறங்கி 1202 ஓட்டங்களை குவித்ததுள்ளார். அதன்படி அவரது சாரசரி 133 ஆகும். அத்துடன் இதில் அவர் 6 சதங்களையும், 3 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டில் 24 டெஸ்ட் இன்னிங்ஸுக்களை எதிர்கொண்ட அவர் 1322 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 55.08 என்பதுடன் 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் என்பவற்றையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.