இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலப்பகுதியில் பலர் கிரிக்கெட் ஊழல் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

பொதுமன்னிப்பு காலம் இன்னமும் ஒரு வார பகுதியில் முடிவடைய உள்ள நிலையில் பலர் பல விடயங்களை தெரிவித்துள்ளனர் என ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ்மார்சல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை இலங்கை தொடர்பிலான விசாரணைகளிற்கு பயன்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிகெட்டில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து முன்னர் தகவல்களை வழங்காதவர்கள் தற்போது தகவல்களை வழங்குவதற்கான 15 நாள் பொதுமன்னிப்பு காலத்தின் முதல் வாரம் முடிவடைந்துள்ளது என அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்.

தகவல்களை வழங்க பலர் முன்வந்துள்ளமை திருப்தியளித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக எங்களிற்கு கிடைக்கும் தகவல்கள் இலங்கை குறித்த பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் இலங்கை கிரிக்கெட்டில் காணப்படும் ஊழல் குறித்து முழுமையான கருத்தொன்றை உருவாக்கிக்கொள்வதற்கும் இந்த விபரங்கள் உதவியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு வாரகாலப்பகுதிக்குள் மேலும் பல வீரர்களையும் ஏனையவர்களையும் கிரிக்கெட் ஊழல் குறித்த தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அலெக்ஸ் மார்சல் தெரிவித்துள்ளார்.