பாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று இரவு சுமார் 40 பயணிகள் மேற்படி பஸ்ஸுல் பயணித்துக் கொண்டிருந்தபோது பலூசிஸ்தானின், ஹப் அருகே, எதிரிபொருள் ஏற்றி வந்த லோறியொன்றுடன் மோதியுள்ளது.

இவ்வாறு மோதிய லொறியில் ஈரானிய டீசல் இருந்ததால் விபத்தின்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் உயிரை காப்பாற்ற பஸ்ஸை விட்டு தப்பிக்க முயற்கிகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.

குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து 26 உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருவதாகவும் லாஸ்பேலா துணை ஆணையாளர் ஷபீர் மெங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் 16 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.