ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிளவுபடுத்த கட்சிக்குள்ளேயே சிலர்  விலைபோயுள்ளனர். விமல் வீரவன்ச தேசிய அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கள்ள உறவு வைத்துள்ளார்  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பிரதியமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

ஒதுக்க வேண்டிய நபர்களை விரைவில் ஓரங்கட்டிவிட்டு பலமான கூட்டணியை உருவாக்குவோம். அதேபோல் அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அமையும்  எனவும் அவர் குறிப்பிட்டார். 

பண்டாரகமவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்தி நாட்டில் மீண்டும் எமது ஆட்சியை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும். எனினும் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட மோசமான மாற்றங்கள் மற்றும் சர்வதேச தரப்பில் எழுந்துள்ள அழுத்தங்களை மாற்றியமைக்க பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவை இருந்தது. அதற்கமையவே நாம் தேசிய அரசாங்கம் என்ற நிலைப்பாட்டிற்கு சென்றோம். அதேபோல் தேசிய அரசாங்கம் மூலம் நாட்டில் நல்ல மாற்றங்களை நாம் ஏற்படுத்தியுள்ளோம். 

எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் பிரதான பிரச்சினைகளை தீர்வு கண்டவுடன் மீண்டும் தனிக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதே இரண்டு கட்சிகளினதும் நோக்கமாகும். எமக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொள்கை ரீதியிலும், செயற்பாடு ரீதியிலும் பாரிய முரண்பாடுகள் உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய கட்சியாகும், 

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் மட்டுமல்லாது அனைத்து தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற்று பலமான கூட்டணியை அமைத்திருப்பதிலேயே தங்கியுள்ளது.  

அவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உடைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனிமைப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமில்லாது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கம் வகிக்கும் ஒருசிலரும் எம்முடன் இருந்துகொண்டு கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். 

தேசிய அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்துவதாக கூறிக்கொண்டு இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய உறவை  மேற்கொண்டு வருகின்றனர். விமல் வீரவன்ச இன்று எம்மை விமர்சிக்கின்றார்.  ஆனால் நள்ளிரவில் வோடர்ஸ் எஜ்ஜில் இரகசியமாக கணக்குவழக்குகளை நடத்துகின்றார். எங்களுக்கும் எல்லா உண்மைகளும் தெரியும். இந்த உண்மைகளை வெகு விரைவில் வெளிப்படுத்தி ஒதுக்க வேண்டிய நபர்களை ஓரங்கட்டிவிட்டு பலமான கூட்டணியை உருவாக்குவோம். அதேபோல் அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியை உருவாக்குவோம். இப்போதே பல்வேறு கட்சிகளுடனும் சிவில் அமைப்புகளுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். விரைவில் ஜனாதிபதி தலைமையில் கட்சியின் மத்தியகுழு கூடி முக்கியமான தீர்மானங்களை முன்னெடுக்கும் என்றார்.