(ஆர்.யசி)

சகல அதிகாரங்களையும் ஒரு இடத்தில் குவித்து  ஒரு நபரை பலப்படுத்துவதை விடுத்து ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நிறைவேற்று முறைமை குறித்தும் நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கருத்து முன்வைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி முறைமைக்கும் அந்த பதவிக்கும் நான் எப்போதும் விருப்பமில்லை. பண்டாரநாயக அம்மையார்  அதற்கான முயற்சிகளை எடுத்த போதே நான் அதனை எதிர்த்தேன்.  ஜனாதிபதி என்பவர் சகல அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு சர்வாதிகாரியாக செயற்படும் நபர். அந்த அதிகாரம் இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. 

எனினும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அந்த அதிகார பலம் இருந்த காரணத்தினால் தான் அவரால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. ஆனால் இப்போது யுத்தம் இல்லை. நாடு அமைதியாக உள்ளது. ஆகவே இப்போது பாராளுமன்ற அதிகாரங்கள் பலமடைய வேண்டும்.