(எம்.மனோசித்ரா)

இலங்கை கிழக்கு கடைற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்கானிப்பு நடவடிக்கைகள் மூலம் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்ட விரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும், 43 கிலோ கிராம் மீன்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ஐவரும் திருகோணமலை கடல்வள பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன் மற்றும் இயந்திரங்களும் இவ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.