முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 

அதன் பிரகாரம் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினை எதிர்காலத்தில் அதிகார சபையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

றாகமை நகரை முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு பகுதியாக இன்று காலை அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முற்சக்கர வண்டி கட்டுபாட்டு வலயத்தினை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் முதன் முதலில் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

அதனடிப்படையில் றாகமையின் இன்று இரண்டாவது நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் கீழ் றாகமை நகரிலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர்களிற்கு ஓய்வூதிய முறையொன்றை அறிமுகஞ்செய்தல், 25 வருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டவர்களை கௌரவித்தல் , றாகமை பகுதியிலுள்ள மூத்த முற்சக்கர வண்டி சாரதியை கௌரவித்தல் ஆகியன இன்று நடைப்பெற்றது.  

இந் நிகழ்வின் விசேட அம்சமாக 50 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாத்துறை அனுமதிபத்திரமும் வழங்கப்பட்டது.

 

வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தேகொட உள்ளடங்கலாக அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டார்கள்.