சமூகங்களும் கல்வி முறைகளும் தோன்றிய காலந்தொட்டு இரு துறைகளிலும் ஏற்ற தாழ்வுகளும் சமமின்மையும் காணப்பட்டன. இவை இன்றுவரை நீடித்து வருகின்றன. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்தான் கல்வித் துறையிலும் பிரதிபலிப்பதாகக் கூறுவர். உயர் குடியினருக்கும் செல்வந்த வகுப்பினருக்கும் கிடைத்த கல்வி வசதிகள் சாதாரண வகுப்பினருக்குக் கிட்டுவதில்லை, பாடசாலைக் கல்வியானது உயர் வகுப்பினருக்குச் சார்புடையது; இதனால் இன்றைய கல்விமுறை அவ்வகுப்பினருக்கே அதிக பயன்களைத் தருகின்றது. மேலும் தீவிரவாத (உதாரணமாக, மார்க்சிய) சிந்தனையாளர்களின் நோக்கில் கல்வி முறையானது, வர்க்கபேதமுள்ள சமூக அமைப்பினைத் தொடர்ந்து "மீள் உருவாக்கம்" செய்யவே உதவுகின்றது என்றும் வாதிடுவர்.
இத்தகைய நிலைமைகள் ஆதார பூர்வமாகவும் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டமையால் மேற்குலக நாடுகளும் வளர்முக நாடுகளும் இந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. பெரும்பாலான கல்விச் சீர்திருத்தங்கள் கல்வித் துறையில் சமவாய்புகளை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டவை.
இலங்கையில் இலவசக் கல்வி, இலவசப் பாடநூல், சீருடை, பயிற்று மொழியாகத் தாய்மொழி, ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில், மஹாபொல புலமைப்பரிசில் என அடுக்கிக் கொண்டு செல்லலாம். உதவி பெறும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றபோதும் (1960/ 61) பல்கலைக்கழக அனுமதி முறை மாற்றப்பட்டு தரப்படுத்தல், மாவட்ட அனுமதி முறை என்பன வந்தபோது 'கல்வியில் சமவாய்ப்பு' என்ற வாதமே முன்வைக்கப்பட்டது.
எண்ம இடைவெளி என்பது
ஆனால் இன்று தகவல் தொழில்நுட்பம், நாளாந்த வாழ்க்கையில் கணனிப்பாவனை என்பவற்றின் அதிகரிப்போடு இதுவரை காலமும் இல்லாத புதிய ஒரு சமூக ஏற்றத்தாழ்வு இனங்காணப்பட்டுள்ளது. இதனையே எண்ம இடைவெளி அல்லது எண்ணிலக்க இடைவெளி (Digital Divide) என்பர். படிப்பறிவுள்ளோர், படிப்பறிவற்றோர் என்ற வேறுபாடு, ஏற்றத்தாழ்வு போன்று இன்றைய கணனி யுகத்தில் கணனித் திறனுடையோர், கணனித் திறனற்றோர் என்ற வேறுபாடு கருத்திற் கொள்ளப்படுகின்றது. இதனையே எண்ம இடைவெளி என்பர்.
கடந்த காலங்களிலும் இன்றும் எழுத்தறிவற்றோர் அனுபவித்து வரும் பிரதி கூலங்களையும் சிரமங்களையும் நவீன உலகில் கணனித் திறனற்றோர் அனுபவிக்க வேண்டிவரும் இந்நிலையில் கணனித் திறன் பாடசாலைகளிலும் உயர்கல்வி நிலையங்களில் கல்விபெறவும் அலுவலகங்களில் தொழில்புரியவும் வர்த்தக நிறுவனங்களை நடத்தவும் தேவைப்படுகின்றது. இப்பட்டியலை நீட்டிக் கொண்டே செல்ல முடியும். அந்த அளவுக்கு நவீன உலகில் கணனிப் பயன்பாடு நவீன வாழ்க்கையின் சகல துறைகளிலும் ஏற்கனவே விரிவடைந்துவிட்டது. அது பற்றி மேலும் விரித்துக் கூற வேண்டிய அவசியமில்லை. எவ்வாறாயினும் நவீன உலகில் கணனித் திறன்களைக் கைவரப்பெற்றிருப்பதன் முக்கியத்துவமும் அவ்வாறான திறன்களை உடையோர் பற்றிய தொகை மதிப்பீடும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு புறம் கணனித் தொழில்நுட்ப அறிவையும் திறன்களையும் கொண்டோர் அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் பல ஏற்றங்களைக் காண்பர். மறுபுறம் அவ்வாறான அனுகூலங்கள், பயன்கள், ஏற்றங்கள் என்பவை கணனித் திறனற்றோருக்குக்கிட்டாது.
நன்மைகள், பயன்கள்
இன்று தகவல் தொழில்நுட்பம், இணையம், ஈ அஞ்சல் பல்வகைத் தொலைபேசி என்பன மக்களுக்கான சமூக தொடர்பாடலுக்காக மட்டுமன்றி பொருளாதார மேம்பாட்டுக்கும் அவசியமானவை. இவற்றின் பயன்பாடானது தேசிய உற்பத்திக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. பொருளுற்பத்தி, சந்தைகளைப் பெறுதல், விற்பனை என்று வரும்போது இவையூடாகத் தேவையான தகவல்களை மக்கள் துரிதமாகப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான தகவலும் அறிவும் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் என்று உலகின் பிரதான நிதி நிறுவனங்களும் அரசாங்கங்களும் கருதுகின்றன.
கணனிப் பயன்பாடும் கணனித் திறனும் மக்களுக்கு வழங்கும் நன்மைகள் பற்றிய பல அட்டவணைகள் உண்டு.
*இன்று சகல தொழில்களிலும் கணனி பயன்படுத்தப்படுவதால் தொழில்களை நாடுவோர் கணனித் திறன்களை உடையவர்களாய் இருத்தல் வேண்டும்.
*கணனியினால் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். பிரச்சினையை இனங்கண்டபின் அது பற்றி மற்றவர்களின் ஆலோசனையை நாடாது கணனியினூடாகப் பொருத்தமான தகவல்களைப் பெற்று பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
இதே விடயத்தை வேறு விதமாகக் கூறினால் ஆசிரியர் மற்றும் நிறுவனங்களின் துணையின்றி சுயமாகப் புதிய விடயங்களை மக்கள் இணைய வழியில் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு வாழ்க்கை நீடித்த கல்விக்குக் கணனித் திறன்கள் தேவை.
மேலும் கணனித் திறன்கள் பல பணிகளைத் துரிதமாகச் செய்து கொள்ள உதவுவதால் நேரமும் மிச்சமாகின்து.
உலகளாவிய தொடர்பாடலுக்கு உகந்த கணனித் திறன்களைப் பெறாதிருப்பது மக்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்திவிடும்.
இன்று நடைபெற்றுவருவது ஒரு அறிவுப் புரட்சி; ஒருபுறம் அறிவு துரிதமாக உருவாக்கப்படுகின்றது. மறுபுறம் உருவாக்கப்பட்ட அறிவு துரிதமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. (இணையத் தளங்களுக்கூடாக) மக்கள் இவ்வாறான அறிவுப் புரட்சியின் பார்வையாளராக அல்லாது பங்குதாரர்களாக அவர்கள் கணனித் திறன் படைத்தவர்களாக இருத்தல் வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில் எண்மத் தொழில் நுட்பங்கள் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன; வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன; சேவைகளை வழங்குவதில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய ரீதியில் எண்மித்த தொழில்நுட்பங்கள் துரிதமாகப் பரவியுள்ள போதிலும் அவற்றின் ஒட்டு மொத்தத் தாக்கம் பின்னடைந்தே காணப்படுகின்றது. மேற்கூறப்பட்ட எண்ம இடைவெளி குறைக்கப்பட்டால் மட்டுமே எண்மத் தொழில்நுட்பங்களினால் யாவரும் நன்மைகளைப் பெற முடியும். இணையத் தளங்களை மக்கள் பெறும்வழியை (Access) அதிகரிப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.
ஏற்கனவே கூறியவாறு இணையத்தளம், மொபைல் தொலைபேசி போன்ற தகவல்களைச் சேகரிக்கும் களஞ்சியப்படுத்தும், பகுப்பாய்வு செய்யும், பகிர்ந்து கொள்ள உதவும் எண்மத் தொழில்நுட்பங்கள் துரிதமாகப் பரவி வருகின்றன. உலக வங்கியின் அபிவிருத்தி அறிக்கையின் படி (1916) வளர்முக நாடுகளின் வீடுகளில் மின்சாரம், சுத்தமான நீர் என்பவற்றை விடக் கைத்தொலைபேசி இலகுவாகக் கிடைக்கின்றது. வசதி குறைந்த மக்களில் 70 சதவீதமானவர்கள் இத்தொலைபேசியை கொண்டவர்கள். 2015 இன் முடிவில் 320 கோடி மக்கள் இணையத்தளங்களைப் பயன்படுத்தினர். ஒரு தசாப்த காலத்தில் இத்தொகை மும்மடங்காகி உள்ளது. இதனால் தனி நபர்களுக்குக் கிடைத்த நன்மைகள் இலகுவான தொடர்பாடல், அதிக தகவல் மூலாதாரங்கள், புதிய ஓய்வுநேரப் பணிகள் என்பனவாகும். மேலும் அதிக வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகள், சிறந்த சேவைகள் என்பனவும் கிட்டியுள்ளன.
அதேபோன்று தகவல் தொழில்நுட்பமானது அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் கம்பனிகளுக்கும் பல நன்மைகளை வழங்கி உள்ளது. இதனால் சமூக பொருளாதாரக் கொடுக்கல், வாங்கல்களுக்கான செலவுகள் குறைந்துள்ளன; தகவல்களைப் பெறுவதற்கான செலவுகள் குறைந்துள்ளன; பேரம் பேசல், தீர்மானங்களை மேற்கொள்ளல் போன்ற பணிகள் குறைந்த செலவில் இலகுவாக நடைபெறுகின்றன.
கணினியை மக்கள் பயன்படுத்துவதில் உலகநாடுகளுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. செல்வந்த நாடுகளில் மக்களின் கணினித்திறன் அதிகம். வறிய நாடுகளில் இயல்பாகவே மக்கள் மத்தியில் கணினித் திறனும் பயன்படுத்தும் சதவிதமும் குறைவு.
இதேபோன்று நாடுகளுக்குள்ளும் பிராந்தியரீதியாக நகர்ப்புறம் கிராமப்புறம் என்ற முறையிலும் சமூக வகுப்பு ரீதியாகவும் கணினித் திறன் பயன்படுத்தல் போன்றவற்றில் வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளே எண்ம இடைவெளி எனப்படுகின்றது.
வளர்முக நாடுகளில் வளர்ந்தோருக்கான முறைசாராக் கல்வி ஏற்பாடுகளினூடாகவே அவர்களுக்குக் கணினித் திறன்கள் வழங்கப்படமுடியும். முறையான அரசாங்க மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் வளர்ந்தோருக்கு இவ்வாறான கற்கை நெறிகள் இலகுவாக வழங்கப்படுகின்றன. வேலையில் உள்ள வளர்ந்தோர் இக்கற்கை நெறிகளைப் பயன்படுத்திக் கணினித் திறன்களைப் பெற்றுக் கொண்ட போதிலும் சுயதொழில் புரிவோர் குடும்பப் பெண்கள் என ஏராளமானவர்கள் இவ்வாறான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில்லை. இப்படிப்பட்டவர்கள் கணினித் திறன்கள் இல்லாமலேயே வாழ்க்கையை நடாத்துகின்றனர். இதன் காரணமாக வளர்முக நாடுகளில் எண்ம இடைவெளி அதிகமாகின்றது.
ஒரு பிரதான கல்வித் துறைச் சவால் தகவல்களை நன்கு அறிந்த நன்கு அறியாத குழுக்களுக்கிடையே உள்ள எண்ம இடைவெளி விரிவடைந்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப அறிவை சமூகமெங்கும் வளர்த்தல்.
யுனெஸ்கோவின் 46 ஆவது சர்வதேசக் கல்விக் கருத்தரங்கு அறிக்கை 2001.
ஒரு எண்ம இடைவெளி காணப்படுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் 70% மான கல்வி நிலையங்களில் நிரந்தர இணையத்தளத் தொடர்பு(Access) உண்டு. எனது நாட்டில் இது 1% மட்டுமே!
பெருநாட்டுக் கல்வி அமைச்சர் (2001)
எமது நோக்கம் சேவைக்காலப் பயற்சி, வளர்ந்தோர் கல்வி ஏற்பாடுகள், தொண்டர் நிறுவனங்கள் என்பன ஊடாக சகல பிரஜைகளுக்கும் கணினித் திறன்களை வழங்குவதாகும். வயது, பாலினம், கல்வி, கலாசாரப் பின்னணி என்ற வேறுபாடின்றி யாவரும் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள இதுவே வழி.
பின்லாந்து கல்வித் தூதுக் குழு (2001)
உலக நாடுகளில் இணைய தளப்பயன்பாடு 2015
ஐரோப்பா 77.6%
அமெரிக்கா 66.0%
(கனடா உட்பட)
அரபு நாடுகள் 37.0%
ஆபிரிக்க நாடுகள் 20.7%
ஆசியா, பசுபிக் 36.9%
உலகம் 43.4%
ஆதாரம் சர்வதேச தொலைத் தொடர்புச் சங்கம் (ITU)
உலக வங்கியின் ஆய்வுகளின்படி எண்மத் தொழில்நுட்பத்தின் நன்மைகளும் பயன்களும் எவ்வாறு இருந்த போதிலும் அவற்றில் ஒட்டுமொத்த தாக்கமானது எதிர்பார்த்ததை விடக்குறைவு தான். வர்த்தகக் கம்பெனிகள் முன்னரை விட அதிக அளவில் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்திய போதிலும் உலகின் உற்பத்தி அதிகரிப்பு மந்தமாகவே இருந்து வருகின்றது. எண்மத் தொழில் நுட்பமானது உழைக்கும் உலகை மாற்றிவிட்ட போதிலும் பல நாடுகளில் நாடுகளுக்குள்ளான எண்ம இடைவெளி அதிகரித்து வருகிறது. எண்ம அடிப்படையில் தொழில் புரிவோர் வேறுபட்டு காணப்படுகின்றனர்.
எண்மத்திறன்களை உடைய கல்வி கற்ற உயர்குழாத்தினர் தான் மேற்கூறிய நன்மை பெறக்காரணம் எண்ம இடைவெளி விரிவடைந்து வருவதுதான் என்றும் கூறப்படுகின்றது.
உலக வங்கியின் மதிப்பீட்பின் படி உலகமக்களின் 60 சதவீதமானவர்கள் எண்மத்திறன்கள் அற்றவர்கள். எனவே அவர்கள் எண்மப் பொருளாதார முறையில் பங்கேற்க முடியாது. அவ்வாறே ஆறு கோடி மக்களுக்குத் துரிதகதியில் இயங்கக் கூடிய இணையதள (broadband internet) வசதிகள் இல்லை. நாலு கோடி மக்களுக்கு இணையதளப்பெறுவழி எதுவுமில்லை. இரண்டு கோடி மக்களுக்குக் கைத்தொலைபேசியும் இல்லை. வயது, வாழ்விடம், பால்நிலை எனப் பல அடிப்படைகளில் எண்ம இடைவெளி காணப்படுகின்றது.
ஆபிரிக்க நாடுகளில் செல்வந்தர்களில் 60 சதவீதமானவர்கள் கீழ் மட்ட மக்களை விட மும்மடங்கு அதிகமாக இணைய தள வாய்ப்புள்ளவர்கள். வயதானவர்களை விட இளைஞர்களும் கிராமப் புற மக்களை விட நகர்ப்புற மக்களும் இருமடங்கு வாய்ப்புள்ளவர்கள்.
இப்பின்புலத்தில் உடனடியாக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுடியவிடயம் யாவருக்கும் இணையதளத் தொடர்புகளை வழங்குவதாகும்.
மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவத்தையும் சமூக நகர்வையும் நாட்டில் பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்த எண்ம இடைவெளி துரிதமாக அகற்றப்படல் வேண்டும். என வாதிடப்படுகின்றது. உதாரணமாகக் கைத்தொலைபேசி அதிக பாதுகாப்பைத் தருவதால் மக்கள் வாழ்க்கை மேம்படுகின்றது. வேலைகள் இணைய வழியில் நடைபெறுகின்றன. பொது நல சேவைகளும் அவ்வழியிலேயே பெறப்படுகின்றன. எனவே பிரஜைகள் மத்தியில் சமத்துவத்தைப் பேண இவ்விடைவெளி அகற்றப்படல் வேண்டும். மேலும் பின்தங்கிய மக்கள் வாழ்க்கையில் உயர்ந்த சமூக அந்தஸ்த்தைப் பெற அதாவது சமூக ரீதியாக நகர்ந்து செல்ல எண்மத் திறன்கள் தேவை. சில அரசறிவாளர்கள் நாட்டில் மக்களின் சனநாயகப் பங்கேற்பைத் தேர்தல்களிலும் கலந்துரையாடல்களிலும் மேம்படுத்த இவ்விடைவெளி அகற்றப்படல் வேண்டும் என்பர்.
இத்தகைய பின்புலத்தில் மக்களின் எண்ம கணனித்திறன் பற்றிய தொகை மதிப்பீடு முக்கியத்துவம் பெறுகிறது. நீண்ட காலமாக எழுத்தறிவு பெற்றிருந்த முக்கியத்துவத்தைத் தற்போது எண்ம அறிவு பெற்றுள்ளது. எனவே வளர் முகநாடுகளின் அரசாங்கங்கள் தற்போது இருந்து
பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இளந்தலைமுறையினருக்காக, சகல பாடசாலைகளிலும் தகவல் தொழில்நுட்பம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. தேவையான கணனிகளைக் கொண்ட கணனி ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கற்கவும் சில பாடங்களை ஆங்கிலமொழியில் கற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இணையத்தளங்களையும் குறுந்தட்டுக்களையும் கற்பித்தல் துணைக்கருவிகளாகப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. ஆசிரியர்களின் கணினித் திறன்கள் காலத்துக்குக் காலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
எவ்வாறாயினும், எண்ம திறன்களைப் பெற்றுக் கொள்வதில், இளந்தலைமுறையினருக்கு இருக்கும் தேவையும் உற்சாகமும் மூத்த தலைமுறையினரிடம் காணப்படுவதில்லை. இதுவே எண்ம இடைவெளிக்குப் பிரதான ஒரு காரணமாக உள்ளது. அண்மைக்கால ஆய்வுகளின் படி, எண்ம இடைவெளியைத் துரிதமாக அகற்ற முடியாமைக்கான காரணங்கள்
எண்ம அறிவின் பொருத்தப்பாடு, நன்மைகள் பற்றிய அறியாமை
தகவல் தொழில்நுட்பங்களில் பரிட்சயமின்மை, பயன்படுத்துவதில் நம்பிக்கையின்மை
தகவல் தொழில்நுட்ப சாதனங்களை நிறுவிக் கொள்வதில் உள்ள செலவுகள்
முதலாவது இரண்டு பிரச்சினைகளையும் அரசாங்கத்தின் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள், பரப்புரைகள் மூலம் எதிர்கொள்ள முடியும். அத்துடன் அரசாங்கமட்டம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம், பயணம் (உதாரணமாக E-Government, E-Learning, E-Health) என்பவற்றைக் கணினி மயமாக்குவதன் மூலம், மக்கள் இத்தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு ஊக்குவிக்கலாம்.
இறுதியாக, இலங்கையில் எண்ம இடைவெளி, கணினிப் பயன்பாடு பற்றிய தரவுகள், உள்நாட்டில் துறைகளுக்கிடையேயும் (நகரம், கிராமம், பெருந்தோட்டம்) மாகாணங்களுக்கிடையேயும் நிலவும் எண்ம இடைவெளியைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
சோ.சந்திரசேகரன்
பேராசிரியர்
இலங்கையில் எண்ம இடைவெளி கணினி எழுத்தறிவு
கணினி வைத்திருக்கும் இல்லங்கள் துறை வகைப்படி / மாகாண வகைப்படி (2014)
துறை / மாகாணம் கணினி மேசை/மடி 2014
இலங்கை 22.4%
நகரம் 35.8%
கிராமம் 20.4%
பெருந்தோட்டம் 4.6%
மாகாணம்
மேல் 33.0%
மத்திய 23.5%
தென் 21.0%
வட 19.5%
கிழக்கு 14.7%
வடமேல் 20.1%
வடமத்திய 19.1%
ஊவா 11.1%
சப்பிரகமுவ 16.6%
ஆதாரம் : தொகை மதிப்பு, புள்ளி விபரத்திணைக்களம்.
குறிப்பு : பெருந்தோட்டத்துறை, வட மற்றும் கிழக்கு மாகாணங்களின் பின் தங்கிய நிலையைக் கவனிக்க.
கணினி எழுத்தறிவு துறை வகைப்படி 2014
இலங்கை
துறை 25.1%
நகரம் 34.6%
கிராமம் 23.8%
பெருந்தோட்டம் 6.2%
மாகாணம்
மேல் 34.3%
மத்திய 24.3%
தென் 25.4%
வட 17.5%
கிழக்கு 15.9%
வடமேல் 22.6%
வடமத்திய 15.3%
ஊவா 17.1%
சப்பிரகமுவா 22.6%
ஆதாரம் : தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM